தேடுதல்

உரோம் நகரில் ஐ.நா.வின் உணவு பற்றிய தயாரிப்பு மாநாடு நடைபெற்ற அரங்கம் உரோம் நகரில் ஐ.நா.வின் உணவு பற்றிய தயாரிப்பு மாநாடு நடைபெற்ற அரங்கம் 

அனைவருக்கும் உணவு கிடைப்பது, அடிப்படை உரிமை

கோவிட்-19 பெருந்தொற்று, அனைவருக்கும் உணவு கிடைக்கும் முறைகளில் சமத்துவமற்ற நிலைகளையும், அநீதிகளையும் உருவாக்கியுள்ளது - உலகளாவிய காரித்தாஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உரோம் நகரில் நடைபெற்ற ஐ.நா.வின் உணவு பற்றிய தயாரிப்பு மாநாட்டை முன்னிட்டு அறிக்கை வெளியிட்ட, உலகளாவிய காரித்தாஸ் நிறுவனத்தின் பொதுச்செயலர், திருவாளர் அலாய்சியஸ் ஜான் அவர்கள், எல்லாருக்கும் உணவு கிடைப்பது, மனிதரின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும் என்று கூறியுள்ளார்.

உணவு அமைப்புகள் குறித்து கொள்கைகளை வரையறுப்பது, மற்றும், அவற்றை நடைமுறைப்படுத்துவது பற்றிய அனைத்து நிலைகளிலும் இடம்பெறும் கலந்துரையாடல்களில், இயற்கை முறையில் உணவு உற்பத்தி செய்யும் உள்ளூர் விவசாயிகள், அதில் அதிகம் ஈடுபட்டுள்ள பெண்கள், மற்றும், ஏழைகளின் உரிமைகள் இணைக்கப்படவேண்டும் என்று, ஜான் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

எல்லாருக்கும் உணவு என்ற முயற்சிக்கு, வேதிய உரங்களைப் பயன்படுத்தி பெருமளவில் உற்பத்தி செய்யும் வேளாண்மை மட்டுமே பதிலளிப்பதாய் இருக்காது, மாறாக, உணவு சார்ந்த நியாயமான ஓர் அமைப்புமுறையில், பெண்களும், குறுநில விவசாயிகளும் இணைக்கப்படுவதே, அதற்கு உதவும் என்றும், ஜான் அவர்கள் கூறியுள்ளார். 

கோவிட்-19 பெருந்தொற்று, அனைவருக்கும் உணவு கிடைக்கும் முறைகளில் சமத்துவமற்ற நிலைகளையும், அநீதிகளையும் உருவாக்கியுள்ளது எனவும், இம்மாதங்களிலும், வரவிருக்கும் ஆண்டுகளிலும் பல இலட்சக்கணக்கான மக்கள், உணவு பாதுகாப்பின்மை மற்றும், சத்துணவு பற்றாக்குறையை எதிர்கொள்வர் எனவும், காரித்தாஸ் நிறுவனத்தின், பொதுச் செயலர் குறிப்பிட்டுள்ளார்.  

பல ஆண்டுகளாக, காரித்தாஸ் நிறுவனம், மிகவும் ஏழைச் சமுதாயங்களோடு கொண்டிருந்த அனுபவங்களின் அடிப்படையில் தன் கருத்துக்களை வெளியிடுவதாகத் தெரிவித்துள்ள ஜான் அவர்கள், பாரம்பரிய இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தல், உள்ளூர் சந்தைகளுக்குச் சாதமாக விநியோகிக்கப்படும் பொருள்கள் பற்றி பரிசீலனை செய்தல், பொறுப்புள்ள உணவுப் பயன்பாட்டை ஊக்குவித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தப்படுமாறு வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 July 2021, 13:52