தேடுதல்

உரோம் நகரில் நடைபெற்ற ஐ.நா.வின் உணவு பற்றிய தயாரிப்பு மாநாடு உரோம் நகரில் நடைபெற்ற ஐ.நா.வின் உணவு பற்றிய தயாரிப்பு மாநாடு 

பழங்குடி இனத்தவரின் உணவு முறைகள், இயற்கை உணவு

2050ம் ஆண்டுக்குள் உணவு உற்பத்தியை ஐம்பது விழுக்காட்டிற்கு மேல் அதிகரிப்பதற்கும், உலகின் 900 கோடிக்கு அதிகமான மக்களுக்கு உணவளிப்பதற்கும், பழங்குடி இன மக்கள் உணவு உற்பத்தி செய்யும் முறைகள் ஊக்குவிக்கப்படவேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தாங்கள் பயிர்செய்யும் நிலத்தோடு நலமான உறவைக் காத்துவரும், பழங்குடி இனத்தவர் மற்றும், பாரம்பரிய வேளாண் உற்பத்தியாளர்கள் ஆகியோரின் உணவு உற்பத்திகள் மதிக்கப்படவேண்டும், மற்றும், ஊக்குவிக்கப்படவேண்டும் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் மாநாடு ஒன்றில் கேட்டுக்கொண்டார்.

ஐ.நா. நிறுவனம், இவ்வாண்டு செப்டம்பர் மாதத்தில் நியுயார்க் நகரில் நடத்தவுள்ள, உற்பத்தி, விற்பனை, விநியோகம் போன்ற, உணவு பற்றிய உச்சி மாநாட்டிற்குத் தயாரிப்பாக, உரோம் நகரில் நடைபெற்ற மாநாட்டில், ஜூலை 27, இச்செவ்வாயன்று உரையாற்றிய, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், இவ்வாறு அழைப்புவிடுத்தார்.

"பழங்குடி இனத்தவரின் உணவு அமைப்புகள், மற்றும், இயற்கை உணவு" என்ற தலைப்பில், உரோம் நகரில் நடைபெற்ற, இந்த தயாரிப்பு மாநாட்டில் உரையாற்றிய கர்தினால் டர்க்சன் அவர்கள், வருங்காலத்தில் எல்லாருக்கும் உணவளிப்பது என்பது, பழங்குடி இன மக்களின், உணவு உற்பத்தி முறைகளை எவ்வளவு தூரம் மதிக்கிறோம் என்பதைச் சார்ந்துள்ளது என்று கூறினார்.

2050ம் ஆண்டுக்குள், உலகளாவிய உணவு உற்பத்தியை, ஐம்பது விழுக்காட்டிற்கு மேல் அதிகரிப்பது, மற்றும், இப்பூமிக்கோளத்தின் 900 கோடிக்கு அதிகமான மக்களுக்கு உணவளிப்பது ஆகியவற்றுக்கு, பழங்குடியினர், உணவு உற்பத்தி செய்யும் முறைகளை ஊக்குவிக்கவேண்டியது அவசியம் என்று, கர்தினால் டர்க்சன் அவர்கள் கூறினார்.

இதற்கு, பழங்குடி இன மக்கள் மற்றும், இயற்கை முறையில் உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகளோடு, தொடர்ச்சியாக கலந்துரையாடல் தேவைப்படுகின்றது என்று கூறியுள்ள கர்தினால் டர்க்சன் அவர்கள், உணவுப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு, உலக அளவில் இடம்பெறும் முயற்சிகளுக்கு, இம்மக்கள் பெரிதும் உதவுவார்கள் என்றும் கருத்து தெரிவித்தார்.

ஏழு சமுதாய-கலாச்சாரப் பகுதிகள்

சுற்றுச்சூழலுக்கு ஏற்றமுறையில் உணவு உற்பத்தி செய்யும் முறைகள், காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளிலுள்ள விவசாயிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறிய கர்தினால் டர்க்சன் அவர்கள், FAO எனப்படும், ஐ.நா.வின் உணவு மற்றும், வேளாண்மை நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ள, பழங்குடி இன மக்கள் வாழ்கின்ற ஏழு சமுதாய-கலாச்சாரப் பகுதிகளைக் குறிப்பிட்டு உரையாற்றினார்.

ஆப்ரிக்கா; ஆசியா; மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, மற்றும் கரீபியன்; இரஷ்யா, மத்திய ஆசியா, மற்றும், டிரான்ஸ்கவ்காசியா; வட அமெரிக்கா; பசிபிக் ஆகிய பகுதிகளைக் குறிப்பிட்ட கர்தினால் டர்க்சன் அவர்கள், உலகின் நிலப்பகுதியில் பெரும்பான்மை பழங்குடி இனத்தவரிடம் இருப்பதால், உயிரியல்கலாச்சார வளங்களை மேலாண்மை செய்யும் உலகளாவிய நடவடிக்கைகளில், இம்மக்களின் பகுதிகளும் இணைக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

உரோம் நகரில் ஜூலை 26 இத்திங்களன்று துவங்கிய, ஐ.நா.வின் உணவு பற்றிய தயாரிப்பு மாநாடு, ஜூலை 28, இப்புதனன்று நிறைவடைந்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 July 2021, 13:41