தேடுதல்

குழந்தை இயேசு சிறார் மருத்துவமனையின் இலச்சனை குழந்தை இயேசு சிறார் மருத்துவமனையின் இலச்சனை  (Vatican Media)

வத்திக்கானின் குழந்தை இயேசு மருத்துவமனை இ-கற்றல் முறை

லிபியாவின் சிறார் மருத்துவமனைகளின் மருத்துவர்களும், செவிலியர்களும், 3 முதல் 6 மாதங்களுக்கு, உரோம் குழந்தை இயேசு சிறார் மருத்துவமனையில் பணியாற்றுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கணனியின் உதவியுடன் அரபு மொழியில் கல்வி கற்கும் திட்டம் ஒன்றை, WHO எனப்படும், உலக நலவாழ்வு நிறுவனத்தின் ஆதரவோடு, உரோம் நகரில் அமைந்துள்ள, வத்திக்கானின் குழந்தை இயேசு சிறார் மருத்துவமனை, மே 31, இத்திங்களன்று துவக்கியுள்ளது.

வத்திக்கானின் குழந்தை இயேசு சிறார் மருத்துவமனையின் தலைவர் Mariella Enoc அவர்களும், WHO நிறுவனத்தின் லிபியா அலுவலகத்தின் இயக்குனர் Elizabeth Hoff அவர்களும், இந்த திட்டத்தை, இத்திங்களன்று செய்தியாளர் கூட்டத்தில் விளக்கினர்.

லிபியாவில் நலவாழ்வுப் பணியாற்றுகின்ற, குறிப்பாக, சிறார் நலவாழ்வுக்கெனப் பணியாற்றுகின்ற மருத்துவப் பணியாளர்களுக்கு ஆதரவளித்து அவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில், கடந்த ஆண்டின் துவக்கத்திலேயே இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது என்று, Mariella Enoc அவர்கள், செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

மருத்துவ ஆராய்ச்சி, மற்றும், ஏனைய சிகிச்சைகள் ஆகியவற்றில் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளவும், இவற்றை விரைவில் தெரிந்துகொள்ளவும், இந்த இணையம் வழித் திட்டம் உதவும் என்றும், Enoc அவர்கள் கூறியுள்ளார்.

இத்திட்டத்தின்படி, லிபியாவின் Tripoli, Benghazi ஆகிய இரு நகரங்களிலுள்ள சிறார் மருத்துவமனைகளின் மருத்துவர்களும், செவிலியர்களும், மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு, உரோம் வந்து வத்திக்கானின் குழந்தை இயேசு சிறார் மருத்துவமனையில் பணியாற்றுவதாக இருந்தது. 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் துவக்கப்படுவதாய் இருந்த இத்திட்டம், கோவிட்-19 பெருந்தொற்றால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், இணையம் வழி கற்றல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என, Enoc அவர்கள், செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இந்நிகழ்வில், இத்தாலியின் உதவி வெளியுறவு அமைச்சர் Marina Sereni அவர்களும்,  வத்திக்கானின் குழந்தை இயேசு சிறார் மருத்துவமனையை உருவாக்கியவர்களில் ஒருவரான Maria Grazia Salviati அவர்களும் கலந்துகொண்டனர்.

01 June 2021, 15:34