தேடுதல்

Vatican News
மறையுரை வழங்கும் திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின் - கோப்புப் படம் மறையுரை வழங்கும் திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின் - கோப்புப் படம்  (Vatican Media)

கர்தினால் பரோலின் - மெக்சிகோ நாட்டில் மேய்ப்புப்பணி பயணம்

தற்போது நிலவும் கோவிட் பெருந்தொற்று நெருக்கடியினால், மெக்சிகோ நாடும், இன்னும் பல இலத்தீன் அமெரிக்க நாடுகளும், புயலில் சிக்கிய படகுகளைப்போல் உணர்ந்துவருகின்றன – கர்தினால் பரோலின்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நம் மத நம்பிக்கைக்கும், நம் வாழ்வுக்கும் இடையே உள்ள முரண்பாடு, இவ்வுலகிற்கு, கிறிஸ்தவர்களாகிய நாம் தரும் பெரும் இடறலாக அமைந்துள்ளது என்று திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், ஜூன் 20 இஞ்ஞாயிறன்று வழங்கிய ஒரு மறையுரையில் கூறினார்.

ஜூன் 18 கடந்த வெள்ளி முதல், 21 இத்திங்கள் முடிய கர்தினால் பரோலின் அவர்கள் மெக்சிகோ நாட்டில் மேற்கொண்ட மேய்ப்புப்பணி பயணத்தில், ஜூன் 19, சனிக்கிழமையன்று, Papua New Guineaன் திருப்பீடத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள Fermín Sosa Rodríguez அவர்களை, Yucatánல் உள்ள அமல அன்னை மரியா திருத்தலத்தில், பேராயராக திருப்பொழிவு செய்துவைத்தார்.

அதற்குப்பின், ஜூன் 20 இஞ்ஞாயிறன்று, மெக்சிகோவின் குவாதலூப்பே அன்னை மரியா பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றிய கர்தினால் பரோலின் அவர்கள், தான் மெக்சிகோ நாட்டில் பணியாற்றிய வேளையில், அன்னையின் மீது தான் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாட்டை, தன் மறையுரையின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.

அத்துடன், 2016ம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மெக்சிகோ நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட வேளையில், அவருடன் மீண்டும் அந்நாட்டில் பயணித்தது அருள் நிறைந்த தருணமாக தனக்கு அமைந்தது என்பதையும் கர்தினால் பரோலின் அவர்கள் தன் மறையுரையில் சிறப்பாக நினைவுகூர்ந்தார்.

தற்போது நிலவும் கோவிட் பெருந்தொற்று நெருக்கடியினால், மெக்சிகோ நாடும், இன்னும் பல இலத்தீன் அமெரிக்க நாடுகளும், புயலில் சிக்கிய படகுகளைப்போல் உணர்ந்துவருகின்றன என்று, இஞ்ஞாயிறு நற்செய்தியுடன், இன்றைய நிலையைத் தொடர்புபடுத்திப் பேசிய கர்தினால் பரோலின் அவர்கள், சமுதாய சமநிலையற்ற போக்கு, வறுமை, வன்முறை, ஆகிய அலைகள், இந்நாடுகளின் தலத்திருஅவைகளை, பெரிதும் பாதிக்கின்றன என்று குறிப்பிட்டார்.

மெக்சிகோவில் வாழும் பல்வேறு குழுமங்கள் ஒருவரையொருவர் எதிரிகளாக காணும் கண்ணோட்டத்தை விடுத்து, ஒருவரையொருவர் சந்திக்கவும், மன்னிக்கவும், உறவு கொள்ளவும் வேண்டும் என்று விண்ணப்பித்த கர்தினால் பரோலின் அவர்கள், இந்நாட்டின் மிகப் பழமையான செறிவுமிக்க கலாச்சாரம் ஒன்றிப்பை வலியுறுத்தும் கலாச்சாரம் என்பதைக் சுட்டிக்காட்டினார்.

திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின் அவர்கள், மெக்சிகோ நாட்டில் மேற்கொண்ட நான்கு நாள் மேய்ப்புப்பணி பயணம், ஜூன் 21 இத்திங்களன்று, மெக்சிகோவின் அரசுத்தலைவர் Andrés Manuel López Obrador அவர்களுடன் மேற்கொண்ட சந்திப்புடன் நிறைவடைந்தது.

மெக்சிகோ நாட்டில் வாழும் 12 கோடியே 60 இலட்சம் மக்களில், 9 கோடியே 78 இலட்சம் பேர் கத்தோலிக்கர் என்பதும், இந்த எண்ணிக்கை, உலகிலேயே, பிரேசில் நாட்டுக்கு அடுத்தபடியாக கத்தோலிக்கர்களின் எண்ணிக்கையை அதிகமாகக் கொண்டுள்ள நாடாக மெக்சிகோவை உருவாக்கியுள்ளது என்பதும், குறிப்பிடத்தக்கன.

21 June 2021, 14:55