தேடுதல்

புலம்பெயர்ந்தோர் கால்களைக் கழுவுகிறார் கர்தினால் தாக்லே (கோப்புப்படம் 27/3/2018) புலம்பெயர்ந்தோர் கால்களைக் கழுவுகிறார் கர்தினால் தாக்லே (கோப்புப்படம் 27/3/2018)  

புலம்பெயர்ந்தோர் 'பயணத்தைக் பகிர்ந்துகொள்ளும்' காரித்தாஸ்

புலம்பெயர்ந்தோரைக் கண்டதும், கடந்து செல்வதற்குப்பதில், நல்ல சாமரியாரைப்போல், நின்று, அவர்களுக்கு உதவிகள் செய்ய அகில உலக காரித்தாஸ் அமைப்பு கற்றுக்கொண்டுள்ளது - கர்தினால் தாக்லே

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

புலம்பெயர்ந்தோர் மீது ஒரு பார்வையை வீசுவதைக் காட்டிலும், அவர்களை கனிவுடன் நோக்கவும், அவர்கள் குரலை காற்றுவாக்கில் கேட்பதற்குப் பதில், காதுகொடுத்து கேட்கவும், அவர்களைக் கண்டதும், கடந்து செல்வதற்குப்பதில், நல்ல சமாரியரைப்போல், நின்று, அவர்களுக்கு உதவிகள் செய்யவும், அகில உலக காரித்தாஸ் அமைப்பு கற்றுக்கொண்டுள்ளது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

'பயணத்தைக் பகிர்ந்துகொள்ள' என்று பொருள்படும் Share the Journey என்ற கொள்கைப்பரப்பு முயற்சியின் நான்காம் ஆண்டு நிறைவையொட்டி, அகில உலக காரித்தாஸ் அமைப்பு, ஜூன் 15, இச்செவ்வாயன்று ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர்கள் கூட்டத்தில், இவ்வமைப்பின் தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் பேசிய வேளையில், கடந்துவந்த நான்கு ஆண்டு பயணத்தின் பயன்களைப்பற்றி கூறினார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்றுவரும் Share the Journey என்ற கொள்கைப்பரப்பு முயற்சியின் பயனாக, புலம்பெயர்ந்தோரை வெறும் எண்ணிக்கையாகக் காணும் கண்ணோட்டத்தை விடுத்து, அவர்கள் ஒவ்வொருவரையும், முகமும், முகவரியும் கொண்ட மனிதர்களாகக் காண, காரித்தாஸ் அமைப்பு, கற்றுக்கொண்டுள்ளது என்று கர்தினால் தாக்லே அவர்கள் கூறினார்.

புலம்பெயர்ந்தோரை தனித் தனி மனிதர்களாக நோக்கி, அவர்கள் ஒவ்வொருவருக்கும் வரவேற்பை வழங்கும் கலாச்சாரத்தை வளர்த்துக்கொண்டுள்ள காரித்தாஸ் அமைப்பு, இந்தக் கலாச்சாரத்தை உலகின் பல அமைப்புக்களோடும், நிறுவனங்களோடும் பகிர்ந்துகொள்ள விழைகிறது என்று கர்தினால் தாக்லே அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

கிரேக்க நாடு, லெபனான், சிரியா, ஜோர்டன், ஈராக், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் 2015ம் ஆண்டு முதல், 2019ம் ஆண்டு முடிய, புலம்பெயர்ந்தோர் முகாம்களில் தான் அடைந்த வேறுபட்ட, தனித்துவமான அனுபவங்களையும், கர்தினால் தாக்லே அவர்கள், செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.

தான் பிறந்து வளர்ந்த பிலிப்பீன்ஸ் நாட்டிலும், நாட்டுக்குள்ளேயே புலம்பெயரும் கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள மக்களைப் பற்றி குறிப்பிட்ட கர்தினால் தாக்லே அவர்கள், தன்னுடைய மூதாதையர், சீனாவிலிருந்து பிலிப்பீன்ஸ் நாட்டிற்கு புலம்பெயர்ந்து வந்ததை, தன் முன்னோர் தனக்குக் கூறியதை நினைவுகூர்ந்தார்.

Share the Journey என்ற கொள்கைப்பரப்பு முயற்சி அதிகாரப்பூர்வமாக நிறைவுற்ற போதிலும், இந்த முயற்சியிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள், புலம்பெயர்ந்தோருடன் மேற்கொள்ளும் பணிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதை எடுத்துரைத்த கர்தினால் தாக்லே அவர்கள், குறிப்பாக, கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கங்களிலிருந்து புலம்பெயர்ந்தோரை மீட்பது அனைத்துலக சமுதாயத்திற்கு முன் உள்ள பெரும் கடமை என்று கூறினார்.

கர்தினால் தாக்லே அவர்கள் தலைமையேற்று நடத்திய இந்த செய்தியாளர்கள் கூட்டத்தில், அகில உலக காரித்தாஸ் அமைப்பின் செயலர், திருவாளர் அலோய்சியஸ் ஜான், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் செயலர், அருள்பணி Bruno Marie Duffé ஆகியோரும் கலந்துகொண்டு தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

15 June 2021, 15:04