தேடுதல்

Vatican News
வயது முதிர்ந்தோரை தேற்றும் இளையோர் வயது முதிர்ந்தோரை தேற்றும் இளையோர்  (©Pixel-Shot - stock.adobe.com)

வயது முதிர்ந்தோரை இளையோர் சந்தித்து ஆறுதலளிக்க...

வயதுமுதிர்ந்தோர் கனிவின்பின் ஆசிரியர்கள், நம் அடிப்படை வேர்களின் பாதுகாவலர்கள், ஞானத்தைப் பரப்புகின்றவர்கள் - கர்தினால் கெவின் ஃபாரெல்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

“எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” (காண்க. மத்.28,20) என்ற தலைப்பில், இவ்வாண்டு, ஜூலை மாதம் 25ம் தேதி முதன்முறையாகச் சிறப்பிக்கப்படும், தாத்தாக்கள் பாட்டிகள் மற்றும், வயது முதிர்ந்தோர் உலக நாளுக்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய செய்தி, ஜூன் 22, இச்செவ்வாயன்று இணையம் வழியாக நடத்தப்பட்ட செய்தியாளர் கூட்டமொன்றில் வெளியிடப்பட்டது.

திருத்தந்தையின் இச்செய்தியை, செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்டு உரையாற்றிய, பொதுநிலையினர், குடும்பம், மற்றும், வாழ்வு திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் கெவின் ஜோசப் ஃபாரெல் (Kevin Joseph Farrell) அவர்கள், இச்செய்தியில் திருத்தந்தை வலியுறுத்திக் கூறியுள்ள கருத்துக்களின் அடிப்படையில் தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார். 

கோவிட்-19 பெருந்தொற்றால் அதிகத் துன்பங்களை எதிர்கொண்டு, தனிமையில் வாடும் வயது முதிர்ந்தோருக்கு எல்லாக் காலங்களையும்விட இக்காலத்தில், கனிவு என்ற பண்பு காட்டப்படவேண்டியது மிகவும் முக்கியம் என்று கூறிய கர்தினால் ஃபாரெல் அவர்கள், இளையோர் வடிவில் வானதூதர்கள், அம்மக்களைச் சந்தித்து ஆறுதலாக இருக்கவேண்டும் என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அதேநேரம், வயதுமுதிர்ந்தோரும், தங்கள் பேரப்பிள்ளைகள் மீது கனிவு காட்டி, அவர்களுடன் உரையாடவேண்டும் என்றும், திசைமாறிச் செல்லும் பல பிள்ளைகளுக்கு,  தங்களின் உறுதியான வழிகாட்டுதல்களை வழங்கவேண்டும் என்றும், திருத்தந்தை குறிப்பிட்டுள்ளதாகவும், கர்தினால் ஃபாரெல் அவர்கள் தெரிவித்தார்.

கனிவு குணமாக்குவது

மற்றவரின் காயங்களைக் குணமாக்கும் கனிவு என்ற பண்பு, தனிப்பட்டவரின் ஓர் உணர்வு அல்ல, மாறாக, மற்றவரோடு தொடர்புகொள்வதற்கு அது ஒரு வழிமுறை எனவும், இப்பண்பு, உண்மையான பிறரன்போடு, சிந்தனையாகவும், செயலாகவும் மாற்றப்படவேண்டும் என்றும், கர்தினால் ஃபாரெல் அவர்கள் கூறினார்.

கனிவு என்ற பண்பு, சமுதாய மதிப்பீட்டைக் கொண்டிருக்கின்றது என்றும், வயதானவர்களுக்கும், நம் அனைவருக்கும் தேவைப்படும் இப்பண்பு, உறவுகளின் கலையை மீண்டும் கற்றுக்கொள்ள உதவுகின்றது என்றும் உரைத்த கர்தினால் ஃபாரெல் அவர்கள், இம்முறையில், தாத்தாக்கள், பாட்டிகள் மற்றும், வயதுமுதிர்ந்தோர், நம் ஆசிரியர்களாக இருக்கின்றனர் என்றும் எடுத்துரைத்தார்.

வயதுமுதிர்ந்தோரின் ஞானம்

வயதுமுதிர்ந்தோரின் ஞானம் குறித்த திருத்தந்தையின் எண்ணங்களையும் செய்தியாளர் கூட்டத்தில் விவரித்த கர்தினால் ஃபாரெல் அவர்கள், அவர்களின் ஞானம், அனுபவத்திலிருந்து வெளிவருவதாகும் என்றும், பேரப்பிள்ளைகள் தங்கள் வாழ்வில் ஏமாற்றத்தை எதிர்கொள்ளும் நேரங்களில், தாத்தாக்கள், பாட்டிகள், அவர்களுக்கு, ஆண்டவர் சுட்டிக்காட்டும் புதியதொரு பாதையை எத்தனையோ முறை புரியவைத்துள்ளனர் என்பதையும் குறிப்பிட்டார்.

இந்த உலக நாள், வயதுமுதிர்ந்தோர் மீது அன்பு வளரவும், அவர்கள், கனிவின்பின் ஆசிரியர்களாகவும், நம் அடிப்படை வேர்களின் பாதுகாவலர்களாகவும், ஞானத்தைப் பரப்புகின்றவர்களாகவும் ஏற்றுக்கொள்ளப்படவும் உதவும் என்ற தன் நம்பிக்கையைத் தெரிவித்தார், கர்தினால் ஃபாரெல்.

பொதுநிலையினர், குடும்பம், மற்றும், வாழ்வு திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Kevin Farrell, அந்த அவையில்,  வயது முதிர்ந்தோரின் மேய்ப்புப்பணிக்குப் பொறுப்பான  Vittorio Scelzo, பிரான்ஸ் நாட்டு Montante பன்னாட்டு அமைப்பின் தலைவர் Monique Bodhuin, உரோம் சான் எஜிதியோ குழுமத்தின் வயது முதிர்ந்தோர் நலப்பிரிவின் பொறுப்பாளர், Maria Sofia Soli, அதே குழமத்தின் இளையோர் அமைதிப்பணிக்குப் பொறுப்பான Elena Liotta ஆகியோர் திருத்தந்தையின் இச்செய்தியை வெளியிட்டு உரையாற்றினர்.

ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதத்தின் நான்காம் ஞாயிறன்று, தாத்தாக்கள், பாட்டிகள் மற்றும், வயது முதிர்ந்தோர் உலக நாள், கத்தோலிக்கத் திருஅவையில் சிறப்பிக்கப்படுகின்றது.

22 June 2021, 15:19