தேடுதல்

மலேசியாவில் கோவிட்-19 தடுப்பூசிகள் மலேசியாவில் கோவிட்-19 தடுப்பூசிகள் 

தாத்தாக்கள் பாட்டிகள் உலக நாளுக்கு நிறைபேறு பலன்கள்

தங்கள் வீடுகளைவிட்டு வெளியே செல்லமுடியாத வயதானவர்கள், வயது முதிர்ந்தோர் முதல் உலக நாளன்று நடைபெறும் புனித நிகழ்வுகளில், தொலைக்காட்சி மற்றும், வானொலி வழியாக, ஆன்மீக முறையில் பங்குகொண்டால், நிறைபேறு பலன்களைப் பெறலாம்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இவ்வாண்டு ஜூலை மாதத்தில், முதன் முறையாகச் சிறப்பிக்கப்படும், தாத்தாக்கள் பாட்டிகள் மற்றும், வயது முதிர்ந்தோர் உலக நாளை முன்னிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும், நிறைபேறு பலன்களை வழங்குவதாகக் கூறியுள்ளார்.

இவ்வாண்டு ஜூலை 25ம் தேதி சிறப்பிக்கப்படும் இந்த உலக நாளன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானின் தூய பேதுரு பெருங்கோவிலில் தலைமையேற்று நிறைவேற்றும் திருப்பலியில், அல்லது, உலகெங்கும் இந்நாளில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில், தகுந்த ஆன்மீகத் தயாரிப்போடு கலந்துகொள்ளும் அனைவரும் நிறைபேறு பலன்களைப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நோயாளிகள், கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், மற்றும், உதவி தேவைப்படும் வயதுமுதிர்ந்தோரை நேரிடையாக, அல்லது, இணையம் வழியாகத் தொடர்புகொண்டு, அவர்களோடு போதுமான நேரம் உரையாடுபவர்களுக்கும் இந்த நிறைபேறு பலன்கள் கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், கடுமையான காரணங்களுக்காக, தங்கள் வீடுகளைவிட்டு வெளியே செல்லமுடியாத நிலையிலும், நோயுற்றும் இருக்கும் வயதானவர்கள், இந்த உலக நாளில், எல்லாவிதப் பாவங்களையும் விலக்கி, அன்றைய நாளில் நடைபெறும் புனித நிகழ்வுகளில், தொலைக்காட்சி மற்றும், வானொலி வழியாக, ஆன்மீக முறையில் பங்குகொண்டால், நிறைபேறு பலன்களைப் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தையின் ஒப்புதலுடன் இந்த நிறைபேறு பலன்கள் பற்றி அறிவித்துள்ள, Apostolic Penitentiary எனப்படும் திருஅவையின் மனசாட்சி திருப்பீடத்துறை, நம்பிக்கையாளர்கள் இந்த நிறைபேறு பலன்களைப் பெறுவதற்கு உதவியாக, அருள்பணியாளர்கள், தங்களின் மேய்ப்புப்பணி கடமையை ஆற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

திருஅவை வழங்கும் நிறைபேறு பலன்களைப் பெறுவதற்கு, ஒப்புரவு அருளாடையாளத்தில் பங்குபெறுதல், திருப்பலியில் பங்குகொண்டு திருநற்கருணை அருந்துதல், திருத்தந்தையின் கருத்துக்களுக்காக இறைவேண்டல் செய்தல் ஆகியவை, வரையறைகளாகும்.

பொதுநிலையினர், குடும்பம், மற்றும், வாழ்வு திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் கெவின் ஜோசப் ஃபாரெல் அவர்கள் கேட்டுக்கொண்டதன்பேரில், இந்த நிறைபேறு பலன்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்று, திருஅவையின் மனசாட்சி திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் மவ்ரோ பியாச்சென்சா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதத்தின் நான்காம் ஞாயிறன்று, தாத்தாக்கள் பாட்டிகள் மற்றும், வயது முதிர்ந்தோர் உலக நாள், கத்தோலிக்கத் திருஅவையில் சிறப்பிக்கப்படுகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 June 2021, 15:29