தேடுதல்

மனித உடன்பிறந்த நிலையின் அனைத்துலக நாள் மனித உடன்பிறந்த நிலையின் அனைத்துலக நாள் 

'வரலாற்று சிறப்புமிக்க ஈராக் பயணம்' - மெய்நிகர் கருத்தரங்கு

போர்கள், தீவிரவாத அலைகள், பெருந்தொற்று என்ற பல்வேறு பிரச்சனைகளால் சூழப்பட்டிருக்கும் உலகில், நாம் அனைவரும் உடன்பிறந்தோர் என்ற உண்மையை ஓங்கி ஒலிக்கும்படி செய்பவர் திருத்தந்தை பிரான்சிஸ் - கர்தினால் லூயிஸ் சாக்கோ

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

போர்கள், தீவிரவாத அலைகள், பெருந்தொற்று என்ற பல்வேறு பிரச்சனைகளால், இவ்வுலகம் சூழப்பட்டிருந்தாலும், அவற்றின் நடுவே, நாம் அனைவரும் உடன்பிறந்தோர் என்ற உண்மையை ஓங்கி ஒலிக்கும்படி செய்வதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஈராக் நாட்டில் தன் திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்டார் என்று, ஈராக் நாட்டின் கர்தினால் லூயிஸ் சாக்கோ அவர்கள் கூறினார்.

'திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வரலாற்று சிறப்புமிக்க ஈராக் பயணம்' என்ற தலைப்பில், ஜூன் 3, இவ்வியாழனன்று, நடைபெற்ற இணையவழி மெய்நிகர் கருத்தரங்கில் பேசிய கர்தினால் சாக்கோ அவர்கள், திருத்தந்தையின் பயணம் தங்கள் நாட்டில் விளைவித்துள்ள மாற்றங்களை மூன்று கருத்துக்களாகப் பகிர்ந்துகொண்டார்.

ஈராக் நாட்டில் பணியாற்றும் அருள்பணியாளர்கள், கல்விப்பணியில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் அரசியல் தளத்தில் பணியாற்றுவோர் என்ற மூன்று குழுக்களால், அனைவரும் உடன்பிறந்தோர் என்ற கருத்தை மீண்டும், மீண்டும் மக்களுக்கு உணர்த்தும்வண்ணம் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளை, கர்தினால் சாக்கோ அவர்கள் தன் பகிர்வில் பதிவு செய்தார்.

மேலும், பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Miguel Ángel Ayuso Guixot அவர்கள், இந்த இணையவழி மெய்நிகர் கருத்தரங்கில் பேசியவேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் ஒரு மேய்ப்பராக வந்திருப்பதாக, ஈராக் நாட்டில் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தில் வலியுறுத்திக் கூறியதை நினைவுகூர்ந்தார்.

'உலக அமைதிக்காகவும், உடன் வாழ்வதற்காகவும் மனித உடன்பிறப்பு' என்ற ஏட்டில், 2019ம் ஆண்டு, அபு தாபியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், அல் அசார் தலைமைக்குரு முனைவர் அஹ்மத் அல்-தய்யேப் (Ahmed Al-Tayyeb) அவர்களும் கையெழுத்திட்டதை தொடர்ந்து, ஈராக் திருத்தூதுப் பயணம், உடன்பிறந்த உணர்வுப் பயணத்தில் மற்றொரு மைல்கல்லாக அமைந்தது என்று கர்தினால் அயூசோ அவர்கள் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 June 2021, 14:43