தேடுதல்

 திருத்தந்தையுடன் திருப்பலி நிறைவேற்றும் ஆயர்  Lazzaro You திருத்தந்தையுடன் திருப்பலி நிறைவேற்றும் ஆயர் Lazzaro You  

கொரிய மறைசாட்சியின் துணையோடு பணியாற்ற...

திருப்பீடத்தில், இரு துறைகளின் தலைவர்கள், ஆசியாவைச் சேர்ந்தவர்கள் என்பது தனக்கு மகிழ்வைத் தருவதாகவும், இது, அகில உலகத் திருஅவைக்கு முக்கியம் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருப்பீடத்தில், இரு துறைகளின் தலைவர்கள், ஆசியாவைச் சேர்ந்தவர்கள் என்பது தனக்கு மகிழ்வைத் தருவதாகவும், இது, அகில உலகத் திருஅவைக்கு முக்கியம் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன்னிடம் கூறியதாக, அருள்பணியாளர்கள் பேராயத்தின் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்டுள்ள ஆயர் Lazzaro You Heung-sik அவர்கள் கூறினார்.

ஜூன் 11, கடந்த வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்ட இயேசுவின் தூய்மைமிகு இதயத் திருநாளன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள்பணியாளர்கள் பேராயத்தின் தலைவராக தன்னை நியமித்ததைக் குறித்து, ஆசிய செய்தியிடம் பேசிய கொரியா நாட்டின் Daejeon மறைமாவட்ட ஆயர் You அவர்கள் இவ்வாறு கூறினார்.

கொரியாவின் மறைசாட்சியான புனித ஆந்திரேயா கிம் அவர்கள் பிறப்பின் இரண்டாம் நூற்றாண்டு சிறப்பிக்கப்படும் இவ்வாண்டில், திருத்தந்தை தனக்கு வழங்கியுள்ள இந்தப் பொறுப்பை, இப்புனிதரின் துணையோடு தான் நிறைவேற்ற விழைவதாக பேராயர் You அவர்கள் கூறினார்.

வட மற்றும் தென் கொரிய திருஅவைகளின் ஒன்றிப்பை வளர்க்கும் நோக்கத்தில், அந்நாட்டிற்கு பலமுறை பயணங்களை மேற்கொண்ட ஆயர் You அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வட கொரியாவுக்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்ள விழைவதாக தன்னிடம் வெளிப்படுத்திய ஆவலைக் குறித்தும் பேசினார்.

ஆசிய நாடுகளிலிருந்து, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவராக, பிலிப்பீன்ஸ் நாட்டின் கர்தினால், லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் பணியாற்றி வருவதற்கு அடுத்தபடியாக, கொரியா நாட்டின் ஆயர் You அவர்கள், அருள்பணியாளர் பேராயத்தின் தலைவராகப் பணியாற்றவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

G7 தலைவர்களின் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள இங்கிலாந்து சென்றிருந்த தென் கொரிய அரசுத்தலைவர் Moon Jae-in அவர்கள், ஆயர் You அவர்கள், தன் பணிவாழ்வுக்கு தேர்ந்துள்ள 'உலகின் ஒளி' என்ற விருது வாக்கிற்கு ஏற்ப, உலகத் திருஅவையில் அவர் ஒளியாக விளங்குவார் என்ற வாழ்த்து தந்திச்செய்தியை அனுப்பியிருந்தார்.

தென் கொரியாவில், 1951ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி பிறந்த, ஆயர் Lazzaro You Heung-sik அவர்கள், 1979ம் ஆண்டு அருள்பணித்துவ வாழ்வுக்கு திருநிலைப்படுத்தப்பட்டார். 2003ம் ஆண்டில் Daejeon மறைமாவட்ட வாரிசு ஆயராக நியமிக்கப்பட்ட இவர், 2005ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து அம்மறைமாவட்ட ஆயராகப் பணியைத் துவக்கினார். (AsiaNews)

14 June 2021, 15:34