தேடுதல்

Vatican News
வத்திக்கான் வங்கியின் அருகில் சுவிஸ் கார்ட்ஸ் வத்திக்கான் வங்கியின் அருகில் சுவிஸ் கார்ட்ஸ்  

IOR நிறுவனத்தின் ஆண்டு நிதி அறிக்கை

Mazars எனப்படும் ஒரு பன்னாட்டு தணிக்கை அமைப்பு, வத்திக்கான் வங்கியின் 2020ம் ஆண்டின் வரவு செலவு கணக்குகளைத் தணிக்கை செய்து, தெளிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வத்திக்கான் வங்கி என பொதுவாக அறியப்படும், மதங்களின் பணிகளுக்காக அமைக்கப்பட்ட IOR நிறுவனம், ஒன்பதாவது ஆண்டாக, தன் ஆண்டு நிதி அறிக்கையை,  ஜூன் 11, இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ளது.

Mazars எனப்படும் ஒரு பன்னாட்டு தணிக்கை அமைப்பு, வத்திக்கான் வங்கியின் 2020ம் ஆண்டின் வரவு செலவு கணக்குகளைத் தணிக்கை செய்து, தெளிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது என்று, திருப்பீட தகவல் தொடர்பகம் அறிவித்துள்ளது.

வத்திக்கான் வங்கியின் உயர்மட்ட கண்காணிப்பு குழு, அந்த வங்கியின் 2020ம் ஆண்டின் நிதி அறிக்கையை, 2021ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி ஒரே மனதாக ஏற்றுக்கொண்டது என்றும் கூறப்பட்டுள்ளது.

வத்திக்கான் வங்கியின் இலாபத்தில் 75 விழுக்காடு திருத்தந்தைக்கோ அல்லது, குறிப்பிட்ட அமைப்புக்களுக்கோ கொடுக்கப்படவேண்டும் என்றும், மீதமுள்ள 25 விழுக்காடு, அந்த வங்கியின் வளர்ச்சிக்கும், கத்தோலிக்கத் திருஅவையின் மறைப்பணிகளுக்கும் பயன்படுத்தப்படவேண்டும் என்றும், கர்தினால்கள் அவை தீர்மானித்துள்ளதாகவும், திருப்பீட தகவல் தொடர்பகம் அறிவித்துள்ளது.

2020ம் ஆண்டு, உலகப் பொருளாதாரத்திற்கு மிகவும் சவால் நிறைந்த காலக்கட்டமாக இருந்தது, எனினும், வத்திக்கான் வங்கி, வத்திக்கான் நாட்டிற்கும், உலகளாவிய கத்தோலிக்கத் திருஅவைக்கும், திருஅவையின் அறநெறி மற்றும், சமுதாயக் கோட்பாடுகளின்படி,  தொடர்ந்து நிதி சார்ந்த பணிகளை ஆற்றிவந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.  

11 June 2021, 15:40