தேடுதல்

ஈராக் திருத்தூதுப் பயணத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்  ஈராக் திருத்தூதுப் பயணத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்  

மாற்றுத்திறனாளிகளும், கோவிட்-19ன் பாடங்களும்

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் மாற்றுத்திறனாளிகள், மற்றும், அவர்களை பராமரிப்பவர்களின் அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுமாறு பாப்பிறை வாழ்வுக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

“மாற்றுத்திறன் கொண்ட மனிதர்களோடு நட்புறவுகொள்தல்: ஒரு புதிய உலகின் ஆரம்பம்” என்ற தலைப்பில், பாப்பிறை வாழ்வுக் கழகம், புதிய ஏடு ஒன்றை, ஜூன் 15, இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் மாற்றுத்திறனாளிகள், மற்றும், அவர்களை பராமரிப்பவர்களின் அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கும் அவ்வேடு, இவர்களுக்கு சிறப்புக் கவனம் தேவைப்படுகின்றது, மற்றும், அதற்கு அவர்கள் தகுதியுள்ளவர்கள் என்று உரைக்கின்றது.

பெருந்தொற்று காலத்தில் உலகளாவிய அமைப்புகள் வெளியிட்ட ஆய்வுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஏடு, பொதுவான நலவாழ்வுக் கொள்கைகளில் மாற்றுத்திறனாளிகள் சார்பில் கடைப்பிடிக்கப்படவேண்டிய, அறநெறி சார்ந்த மூன்று அடிப்படை அம்சங்களைச் சுட்டிக்காட்டியுள்ளது.

பொதுவான நலவாழ்வு கொள்கைகள், மற்றும், மருத்துவச் சிகிச்சைகள் ஆகியவற்றால் மாற்றுத்திறனாளிகள் பயன் அடைவதற்கு பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்படவேண்டும், பெருந்தொற்று காலத்தில், அவர்களின் உடல்நலப் பராமரிப்பு சார்ந்து மேற்கொள்ளப்படும் தீர்மானங்களில் நம்மை ஈடுபடுத்தவேண்டும் என்றும், அவ்வேடு கூறுகிறது.

வறியோர் மற்றும், மாற்றுத்திறனாளிகளோடு தோழமையுணர்வு கொள்வதன் அடிப்படையில், நலவாழ்வுக் கொள்கைகள் அமைக்கப்படுவதை, நாம் ஊக்குவிக்க வேண்டும் என, அவ்வேடு பரிந்துரைத்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் நலவாழ்வு தொடர்பாக, ஏழு நடைமுறைக் கூறுகளைப் பரிந்துரைத்துள்ள இவ்வேடு, மாற்றுத்திறனாளிகள், மற்றும், அவர்களின் குடும்பங்களின் தேவைகள் நிறைவேற்றப்படும் நடவடிக்கைகளில், கத்தோலிக்க நலவாழ்வு நிறுவனங்களின் தலைமைத்துவம் அவசியம் என்று கேட்டுக்கொண்டுள்ளது

15 June 2021, 15:09