தேடுதல்

மரங்கள் நிறைந்த பாதை மரங்கள் நிறைந்த பாதை 

காலநிலை மாற்றம்: ‘நம்பிக்கையும் அறிவியலும்’ கூட்டம்

காலநிலை மாற்றம் குறித்த பிரச்சனை, எண்ணற்ற சவால்களை முன்வைத்துள்ளது, இதற்குத் தீர்வு காண்பதில், மதநம்பிக்கை முக்கியமான இடத்தை வகிக்கின்றது - பேராயர் காலகர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வருகிற நவம்பர் மாதம், கிளாஸ்கோ நகரில் நடைபெறவிருக்கும், காலநிலை மாற்றம் குறித்த, உலக உச்சி மாநாட்டிற்குத் தயாரிப்பாக, வத்திக்கான், இத்தாலி மற்றும், பிரித்தானியா ஆகிய நாடுகள் இணைந்து “நம்பிக்கையும், அறிவியலும்” என்ற தலைப்பில் கூட்டம் ஒன்றை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளன.

வருகிற அக்டோபர் 4ம் தேதி நடைபெறவுள்ள இக்கூட்டம் பற்றி, ஜூன் 17, இவ்வியாழனன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவித்த. திருப்பீட செய்தி தொடர்பகம், காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளில், மதநம்பிக்கையும், அறிவியலும், குறிப்பிடத்தக்க பங்களிக்க முடியும் என்று குறிப்பிட்டது. 

இக்கூட்டத்தில், காலநிலை மாற்றம் குறித்து, எண்ணற்ற சமயத் தலைவர்களும், அறிவியலாளர்களும் உரையாற்றுவார்கள், மற்றும், படைப்பைப் பாதுகாப்பதற்கு ஒருங்கிணைந்த முயற்சிகள் அவசியம் என்பது வலியுறுத்தப்படும் என்று திருப்பீட செய்தி தொடர்பகம் கூறியது.

இத்தயாரிப்புக் கூட்டத்தில் திருப்பீடத்தின் பங்கு குறித்து விளக்கிய, பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்கள், காலநிலை மாற்றத்தைக் குறைப்பது குறித்த நடவடிக்கைகளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மிகுந்த அர்ப்பணத்தோடு செயல்பட்டு வருகிறார் என்றும், இக்கூட்டத்தில் அவர், பங்குபெறாமல் இருந்தால், அது வியப்பூட்டுவதாய் இருக்கும் என்றும் உரைத்தார்.

காலநிலை மாற்றம் குறித்த பிரச்சனை, எண்ணற்ற சவால்களை முன்வைத்துள்ளது, மற்றும், இதற்குத் தீர்வு காணும் முயற்சிகளில், மதநம்பிக்கை முக்கியமான இடத்தை வகிக்கின்றது என்றும், பேராயர் காலகர் அவர்கள் எடுத்துரைத்தார்.

வருகிற நவம்பர் மாதம், முதல் தேதி முதல் 12ம் தேதி வரை, கிளாஸ்கோ நகரில் காலநிலை மாற்றம் குறித்த, உலக உச்சி மாநாடு நடைபெறவுள்ளது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 June 2021, 15:11