தேடுதல்

கர்தினால் மாரியோ கிரேக் கர்தினால் மாரியோ கிரேக்  

2023ம் ஆண்டு உலக ஆயர்கள் மாமன்றம் பற்றி கர்தினால் கிரேக்

உலக ஆயர்கள் மாமன்றம், அனைத்துக் கண்டங்களின் ஆயர் பேரவைகள் மத்தியில் நடைபெறும் கலந்துரையாடல்களின் கனியாகும் - கர்தினால் கிரேக்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலக ஆயர்கள் மாமன்றம், அனைத்துக் கண்டங்களின் ஆயர் பேரவைகள் மத்தியில் நடைபெறும் கலந்துரையாடல்களின் கனியாகும் என்று, உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச்செயலர் கர்தினால் மாரியோ கிரேக் (Mario Grech) அவர்கள், வத்திக்கான் செய்தித் துறையிடம் கூறியுள்ளார்.

2023ம் ஆண்டு அக்டோபரில் வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத் தயாரிப்புக்கள் குறித்து வத்திக்கான் செய்தித்துறையிடம் பகிர்ந்துகொண்ட கர்தினால் கிரேக் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது தலைமைப் பணியைத் தொடங்கிய காலத்திலிருந்து, திருஅவை என்பதற்கு அளித்துவரும் விளக்கம் பற்றிக் குறிப்பிட்டார்.

திருஅவை என்பது, பயணம் மேற்கொண்டிருக்கும், மற்றும், தூய ஆவியாரைப் பின்தொடரும் மக்களைக் கொண்டதாகும் என்று, திருத்தந்தை கூறிவருகிறார் என்றுரைத்த கர்தினால் கிரேக் அவர்கள், இந்தக் கருத்தின் அடிப்படையில், 2023ம் ஆண்டில் நடைபெறும் உலக ஆயர்கள் மாமன்றத்திற்குத் தயாரிப்புகள் இடம்பெற்று வருகின்றன என்று கூறினார்.

2023ம் ஆண்டின் உலக ஆயர்கள் மாமன்றம் பற்றிய திட்டங்களை வெளியிடுவதற்குமுன், உலகின் அனைத்து ஆயர் பேரவைகளின் தலைவர்கள், மற்றும், பொதுச் செயலர்களோடு தொடர்புகொண்டு கலந்துரையாடல்கள் மற்றும், கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெறும் என்றும், கர்தினால் கிரேக் அவர்கள் எடுத்துரைத்தார்.

இதற்கிடையே, திருத்தந்தை  பிரான்சிஸ் அவர்கள், வருகிற அக்டோபர் மாதத்தில், மூன்றாண்டு   ஆயர்கள்   மாமன்றப் பயணம் ஒன்றைத்  துவக்கி வைப்பார் என்றும்,  மறைமாவட்டங்கள், நாடுகள், மற்றும், உலக அளவில் நடைபெறும் அப்பயணம்,  கருத்தறிதல், மற்றும், தெளிந்துதேர்தல் முறைகளில் நடைபெற்று, இறுதியில், வத்திக்கானில் 2023ம் ஆண்டு அக்டோபரில்,  உலக ஆயர்கள் மாமன்றத்தோடு நிறைவடையும் என்றும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

18 June 2021, 15:17