தேடுதல்

Vatican News
திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் - பேராயர் ஈவான் யுர்க்கோவிச் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் - பேராயர் ஈவான் யுர்க்கோவிச்  

திருஅவையின் நலவாழ்வு பணிகளுக்கு அங்கீகாரம்

WHOவில் நிரந்தரப் பார்வையாளர் நிலையை, திருப்பீடம் பெற்றிருப்பது, கத்தோலிக்கத் திருஅவை, கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராக மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அங்கீகாரம் - பேராயர் யுர்க்கோவிச்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மனித சமுதாயம் என்ற குடும்பத்தின் மீதும், அதன் நலவாழ்வின் மீதும் கத்தோலிக்கத் திருஅவை காட்டிவரும் அக்கறையை உலக அளவில் அங்கீகரிக்கும் வண்ணம், WHO என்றழைக்கப்படும் உலக நலவாழ்வு நிறுவனத்தில், திருப்பீடத்திற்கு நிரந்தரப் பார்வையாளர் என்ற உரிமை வழங்கப்பட்டுள்ளது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா. அலுவலகத்தில் நடைபெறும் கூட்டங்களில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பங்கேற்கும் பேராயர் ஈவான் யுர்க்கோவிச் அவர்கள், உலக நலவாழ்வு நிறுவனத்தின் கூட்டங்களில், நிரந்தரப் பார்வையாளராகப் பங்கேற்க, திருப்பீடத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதைக்குறித்து, வத்திக்கான் செய்திக்கு ஜூன் 1, இச்செவ்வாயன்று வழங்கிய நேர்காணலில் இவ்வாறு கூறியுள்ளார்.

உலக நலவாழ்வு நிறுவனத்தின் 74வது பொது அமர்வில், இத்தாலி நாடு முன்வைத்த பரிந்துரைக்கு, இந்தியா, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், குவைத், ஜெர்மனி உட்பட, எழுபதுக்கு மேற்பட்ட நாடுகள், தங்கள் முழு ஆதரவைத் தெரிவித்ததையடுத்து, அந்நிறுவனத்தின் கூட்டங்களில், திருப்பீடம், நிரந்தரப் பார்வையாளராகப் பங்கேற்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று, மே 31 இத்திங்களன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக நலவாழ்வு நிறுவனத்தின் முதல் அவை, 1949ம் ஆண்டு, உரோம் நகரில் நடைபெற்ற வேளையில், அப்போது திருஅவையின் தலைவராகப் பணியாற்றிய திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், இந்த அவையின் உறுப்பினர்களுக்கு வழங்கிய உரையைக் குறித்து, தன் நேர்காணலில் நினைவுகூர்ந்த பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், அந்நிறுவனத்திற்கு திருத்தந்தை வழங்கிய பாராட்டுக்களை குறிப்பிட்டுப் பேசினார்.

கல்வி வழங்குதல், நலவாழ்வு பராமரிப்பு என்ற இரு பணிகள் வழியே, கத்தோலிக்கத் திருஅவையும், திருப்பீடமும் இவ்வுலகில், அனைவராலும் அறிந்துகொள்ளப்படுகிறது என்று கூறிய பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், 1000த்திற்கும் மேலான பல்கலைக்கழகங்கள், 3,00,000த்திற்கும் அதிகமான பள்ளிகள், மற்றும், 1,10,000த்திற்கும் அதிகமான நலவாழ்வு அமைப்புக்கள் வழியே உலக மக்களின் அறிவொளியையும், நலவாழ்வையும் மேம்படுத்தி வருகின்றன என்று கூறினார்.

கோவிட் பெருந்தொற்று பரவியுள்ள இந்தக் காலக்கட்டத்தில், திருப்பீடம், நிரந்தரப் பார்வையாளர் நிலையைப் பெற்றிருப்பது, கத்தோலிக்கத் திருஅவை, இந்தப் பெருந்தொற்றுக்கு எதிராக மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அங்கீகாரம் என்று, பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், எடுத்துரைத்தார்.

முஸ்லீம் நாட்டில் பணியாற்றும் ஓர் அமைச்சர், தான் ஒரு கத்தோலிக்க மருத்துவமனையில் அறுவைசிகிச்சை பெற்றதையும், தன் மகள், ஒரு கத்தோலிக்க மருத்துவமனையில், குழந்தை பெற்றெடுத்ததையும் தன்னிடம் கூறினார் என்று இந்நேர்காணலில் நினைவுகூர்ந்த பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், கத்தோலிக்கர்கள் வழங்கும் நலவாழ்வு பராமரிப்பு, மதம், இனம், நாடு என்ற அனைத்து பிரிவுகளையும் கடந்து அனைவருக்கும் வழங்கப்படுவதை, தற்போது, WHO நிறுவனம் உலகறியச் செய்துள்ளது என்று கூறினார்.

02 June 2021, 14:50