தேடுதல்

வத்திக்கானில் வறியோருக்கு தடுப்பூசிகள் வத்திக்கானில் வறியோருக்கு தடுப்பூசிகள்   (Vatican Media)

வத்திக்கான் - உரோம் வறியோருக்கு தடுப்பூசிகள்

பெருந்தொற்றின் இரண்டாவது அலையால் கடுமையாய்த் தாக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு, திருஅவை, 2 இலட்சம் டாலருக்கு மேற்பட்ட உதவிகளை வழங்கியுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உரோம் மாநகரில் வாழும், ஏறத்தாழ 1,400 வீடற்றவர், மற்றும், ஏழைகளுக்கு, அண்மை வாரங்களில், ஏற்கெனவே, கோவிட்-19 தடுப்பூசிகளை வழங்கியுள்ள வத்திக்கான், மே 08, இச்சனிக்கிழமையன்று, மேலும், 300 பேருக்கு தடுப்பூசிகளை வழங்கியுள்ளது.

உரோம் மாநகரின் சாலைகளில் வாழ்கின்ற ஏழைகளுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படுவது குறித்து, திருத்தந்தையின் தர்மச் செயல்களுக்குப் பொறுப்பான கர்தினால் Konrad Krajewski அவர்கள், வத்திக்கான் வானொலியில் பேசியவேளையில், திருத்தந்தையின் தாராளமனதால் ஈர்க்கப்பட்ட ஏழைகள் பலரின் விண்ணப்பத்தின்பேரில், மேலும் பலருக்கு தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன என்று கூறினார்.

வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ள "இரக்கத்தின் அன்னை" நலவாழ்வு மையம், கடந்த இரு வாரங்களாக, தடுப்பூசி பெற விரும்பும் ஏழைகளிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்றது என்றும், அவ்வாறு விண்ணப்பித்த ஏறத்தாழ முன்னூறு ஏழைகளுக்கு, திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கத்தில், இச்சனிக்கிழமையன்று தடுப்பூசிகள் வழங்கப்பட்டன என்றும், கர்தினால் Krajewski அவர்கள் கூறினார். 

மேலும், “தடுப்பூசிகள் நிறுத்திவைக்கப்படுதல்” நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த கர்தினால் Krajewski அவர்கள், இந்நடவடிக்கை, கோவிட்-19 பெருந்தொற்றால் கொடுந்துயரங்களை எதிர்கொள்ளும் நாடுகளுக்கு உதவுவதை சாத்தியமாக்கியுள்ளது என்று கூறினார்.

எதிர்பார்த்ததைவிட கூடுதலாக பிரபலமாகியுள்ள இந்நடவடிக்கை, காப்பிக் கடைக்குச் செல்பவர்கள், இரு காப்பி கப்புகளுக்குரிய பணத்தைச் செலுத்தி, ஒரு கப் காப்பியை மட்டுமே தாங்கள் பருகி, அடுத்த கப்புக்குரிய பணத்தை, ஏழைகள் காப்பி குடிப்பதற்கு விட்டுவரும் இத்தாலிய பாணிபோல் (caffè sospesi) உள்ளது என்றும் கர்தினால் Krajewski அவர்கள் கூறினார். 

இந்தியாவுக்கு உதவி

இந்நடவடிக்கையால் உந்தப்பட்டு ஆற்றப்படும், சிறிய உதவிகள், தேவையில் இருப்போருக்கு திருஅவை உதவுவதற்கு வழியமைக்கின்றன என்றும், இதனால் பெருந்தொற்றின் இரண்டாவது அலையால் கடுமையாய்த் தாக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு, திருஅவை, 2 இலட்சம் டாலருக்கு மேற்பட்ட உதவிகள் வழங்க இயலும் என்றும், கர்தினால் Krajewski அவர்கள் கூறினார். 

இந்த உதவிகளால், பத்து ஆண்டுகளுக்குமேல் இடம்பெற்ற போரால் மட்டுமல்ல, பெருந்தொற்றாலும் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவுக்கு, 3,50,000 யூரோக்களும்,  இன்னும், பல நாடுகளுக்கு கோவிட்-19 சார்ந்த மருத்துவ கருவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், கர்தினால் Krajewski அவர்கள் தெரிவித்தார்.

08 May 2021, 15:25