தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ், பேராயர் லெயோபோல்தோ ஜிரெல்லி திருத்தந்தை பிரான்சிஸ், பேராயர் லெயோபோல்தோ ஜிரெல்லி  

புதிய திருப்பீட தூதர் பேராயர் ஜிரெல்லி இந்தியாவுக்கு வந்துள்ளார்

பேராயர் ஜிரெல்லி அவர்களின் வருகை, அகில இந்திய திருஅவைக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. இவர் மிகவும் எளிமையானவர் - அருள்பணி D’Souza

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இவ்வாண்டு மார்ச் 13ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தியாவுக்கென நியமித்துள்ள புதிய திருப்பீடத் தூதர், பேராயர் லெயோபோல்தோ ஜிரெல்லி (Leopoldo Girelli) அவர்கள், மே 28, இவ்வெள்ளியன்று இந்தியா வந்தடைந்துள்ளார்.

இவ்வெள்ளி அதிகாலையில் புது டெல்லி விமான நிலையம் வந்திறங்கிய, பேராயர் ஜிரெல்லி அவர்களை, டெல்லி பேராயர் அனில் கூட்டோ, Faridabad ஆயர் Kuriakose Bharanikulangara  ஆகியோர் உட்பட, புது டெல்லியிலுள்ள திருப்பீட தூதரக அதிகாரிகள் சிலர் வரவேற்றனர்.

இந்த வரவேற்பு குறித்து Matters India ஊடகத்திடம் பேசிய, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் துணைப் பொதுச் செயலர் அருள்பணி Jervis D’Souza அவர்கள், கோவிட்-19 பெருந்தொற்று கட்டுப்பாட்டு விதிமுறைகளால், ஒரு சிலரே விமான நிலையம் சென்று, பேராயர் ஜிரெல்லி அவர்களை வரவேற்க முடிந்தது என்று கூறியுள்ளார். 

பேராயர் ஜிரெல்லி அவர்களின் வருகை, அகில இந்திய திருஅவைக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது என்றும், இவர் மிகவும் எளிமையானவர் என்றும், அருள்பணி D’Souza அவர்கள், மேலும் கூறியுள்ளார்.

இந்திய திருப்பீடத் தூதராகப் பணியாற்றிவந்த பேராயர் ஜாம்பத்திஸ்தா திகுவாத்ரோ அவர்கள் 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், பிரேசில் நாட்டுக்குத் திருப்பீடத் தூதராக பணிமாற்றம் செய்யப்பட்டதையடுத்து, 68 வயது நிரம்பிய பேராயர் ஜிரெல்லி அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தியாவுக்கு புதிய திருப்பீடத் தூதராக நியமித்தார்.

பேராயர் ஜிரெல்லி

1953ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி, இத்தாலியின் பெர்கமோ மாவட்டத்தில் Predore எனும் நகரில் பிறந்த பேராயர் ஜிரெல்லி அவர்கள், 1978ம் ஆண்டில் பெர்கமோ மறைமாவட்டத்திற்கென அருள்பணித்துவ வாழ்வுக்குத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

1987ம் ஆண்டில் திருப்பீடத்தின் தூதரகப் பணிகளில் பணியாற்றத் தொடங்கிய பேராயர் ஜிரெல்லி அவர்கள், 2006ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால், இந்தோனேசியாவிற்கும், பின்னர், அதே ஆண்டில் East Timorக்கும் திருப்பீடத் தூதராக நியமிக்கப்பட்டார்.

இவர், 2011ம் ஆண்டில், சிங்கப்பூர் நாட்டிற்கு, திருப்பீடத் தூதராகவும், மலேசியா, புரூனெய்,  வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு, திருப்பீடப் பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டார். 1975ம் ஆண்டில் வியட்நாமிலிருந்து திருப்பீடப் பிரதிநிதி வெளியேற்றப்பட்டபின், அந்நாட்டிற்கு முதன்முறையாக நியமிக்கப்பட்ட பேராயர் ஜிரெல்லி அவர்கள், 2011ம் ஆண்டு ஜூன் 18ம் தேதி, தென்கிழக்கு ஆசிய நாடுகள் அமைப்பிற்குத் (ASEAN) திருப்பீடத் தூதராகவும் நியமிக்கப்பட்டார்.

பேராயர் ஜிரெல்லி அவர்கள், 2017ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதியிலிருந்து, இஸ்ரேல் மற்றும், சைப்ரசின் திருப்பீடத் தூதராகவும், எருசலேம் மற்றும், பாலஸ்தீனாவின் திருத்தூதுப் பிரதிநிதியாகவும் பணியாற்றினார். (Matters India)

28 May 2021, 14:47