தேடுதல்

Vatican News
வறியோருக்கு தடுப்பூசி வழங்கும் வத்திக்கான் அரங்கத்தை, கர்தினால் Konrad Krajewski அவர்களுடன் பார்வையிட்ட திருத்தந்தை வறியோருக்கு தடுப்பூசி வழங்கும் வத்திக்கான் அரங்கத்தை, கர்தினால் Konrad Krajewski அவர்களுடன் பார்வையிட்ட திருத்தந்தை   (AFP or licensors)

தடுப்பு மருந்து வழங்குவதில் திருப்பீட வரலாறு

திருத்தந்தை 7ம் பயஸ் அவர்களின் தடுப்பு மருந்து வழங்கும் திட்டம், மிகத்தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டதுடன், தடுப்பு மருந்துகளைப் பெறுபவர்களுக்கு ஊக்கமும் வழங்கப்பட்டது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள் 

வீடற்றோருக்கு தடுப்பூசிப் போடும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திட்டம், திருஅவை வரலாற்றில், திருத்தந்தையர்கள் ஏழாம் பயஸ் மற்றும், 9ம் பயஸ் ஆகியோர் மேற்கொண்ட தடுப்பு மருந்து வழங்கும் திட்டங்களின் ஒரு தொடர்ச்சியாக உள்ளது என விவரித்துள்ளார், வத்திக்கான் வானொலி நிகழ்ச்சி பொறுப்பாளரான அந்திரேயா தொர்னியெல்லி.

பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்தவரும், நவீன தடுப்பு மருந்துக்களின் தந்தையுமான எட்வர்ட் ஜென்னர் அவர்கள் உயிரோடு இருந்த காலத்திலேயே, மக்களுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கும் திட்டத்தை, திருப்பீடச் செயலர், கர்தினால் Ercole Consalvi அவர்கள் வழியாக வகுத்துச் செயல்படுத்தியவர், திருத்தந்தை 7ம் பயஸ் எனக்கூறும் தொர்னியெல்லி அவர்களின் கட்டுரை, இந்த வரலாற்றுப் பின்னணியுடன் நோக்கும்போது, ஏழைகள் மற்றும் வீடற்றோருக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்டுள்ள தடுப்பூசி திட்டத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது என்றுரைக்கிறது.

திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளுக்கு பொறுப்பாளராக இருக்கும் கர்தினால் Konrad Krajewski அவர்களும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கில், உரோம் நகரின் ஏழைகளையும், வீடற்றோரையும் வரவேற்று, அவர்களுக்கு உணவும், கோவிட் தடுப்பூசியும் வழங்கியது, பல காலமாக வறியோருக்கு தடுப்பு மருந்து வழங்கும் திருப்பீடத் திட்டத்தின் ஒரு பகுதி என்றுரைத்துள்ளார், வத்திக்கான் வானொலி நிகழ்ச்சி பொறுப்பாளர் தொர்னியெல்லி.

18ம் நூற்றாண்டின் இறுதியிலும், 19ம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இத்தாலியில், குறிப்பாக, மத்திய இத்தாலியில் பரவியிருந்த, பெரியம்மை நோய் காலத்தின்போது, அதுவும் 1820ம் ஆண்டு அந்நோய் உச்சத்தைத் தொட்டபோது, தடுப்பூசி திட்டத்திற்கு திருப்பீடம் பெரும் ஆதரவு வழங்கி ஊக்கமளித்தது என உரைக்கும் தொர்னியெல்லி அவர்கள், தடுப்பு மருந்தை கடவுளின் கொடையாக திருப்பீடம் நோக்கியதை தன் கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தடுப்பு மருந்தை அனைத்து மருத்துவர்களுக்கும் இலவசமாக அனுப்பி திருப்பீட  நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து நிலப்பகுதிகளின் மக்களுக்கும் தடுப்பு மருந்துக்களை வழங்கிய திட்டம் குறித்து எடுத்துரைக்கும் தோர்னியெல்லி அவர்கள்,  குழந்தைகளுக்கும், கைவிடப்பட்ட சிறார் வாழும் இல்லங்களுக்கும் இதில் முன்னுரிமை வழங்கப்பட்டன என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

திருத்தந்தை 7ம் பயஸ் அவர்களின் தடுப்பு மருந்து வழங்கும் திட்டம், மிகத்தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டதுடன், தடுப்பு மருந்துகளைப் பெறுபவர்களுக்கு ஊக்கமும் வழங்கப்பட்டதை இக்கட்டுரையில் வரலாற்றுச் சான்றுகளுடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

திருத்தந்தை 7ம் பயஸ் அவர்களின் காலத்தில், பெரியம்மைக்கு எதிரான தடுப்பு மருந்தைப் பெறுவது கட்டாயமாக இருந்த நிலையில், அதற்கு பின் வந்த திருத்தந்தை 12ம் லியோ அவர்கள், இந்த விதியை தளர்த்தி, விருப்பப்படுவோர் மட்டும் இதனை பெற்றுக்கொள்ளலாம் என மாற்றியதையும், அதற்கு பின் வந்த திருத்தந்தை 16ம் கிரகரி அவர்கள், தடுப்பு மருந்து திட்டத்திற்கு புதிய ஊக்கத்தைக் கொடுத்ததோடு, திருத்தந்தையின் நிலப்பகுதிகளில் உள்ள சிறைக்கைதிகளுக்கு கட்டாயமாக பெரியம்மை தடுப்பு மருந்துகள் வழங்கப்பட வேண்டுமென்ற சட்டத்தை கொண்டுவந்ததுடன், நல ஆதரவுத் திட்டங்களுக்கென சிறப்பு அவை ஒன்றையும் உருவாக்கினார் என்ற வரலாற்றையும் குறிப்பிட்டுகின்றது இக்கட்டுரை.

இதற்குப்பின் திருத்தந்தை 9 ஒன்பதாம் பயஸின் காலத்தில், பெரியம்மைக்கு எதிராக தடுப்பு மருந்து வழங்கும் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டதுடன், 1848ம் ஆண்டு இந்நோய் பரவல் மீண்டும் தீவிரமடைந்தபோது, ஏழை மக்களுக்கு தடுப்பு மருந்து வழங்கும் திட்டத்தை தீவிரப்படுத்தியதைச் சுட்டிக்காட்டும் தொர்னியெல்லியின் கட்டுரை, தடுப்பு மருந்துக்களைப் பெற்றவர்கள், அதன் விளைவுகள் குறித்து மருத்துவர்கள் தெரிந்துகொள்ள, எட்டு நாட்களுக்குப்பின் மருத்துவர்களிடம் ஆய்வுக்கு வரும்போது, திருத்தந்தை 9ம் பயஸ் அவர்கள், சிறு ஊக்கத்தொகையை வழங்கி அப்பெருந்தொற்று பரவாமல் தடுப்பதில் ஆர்வம் காட்டியதையும் சுட்டிக்காட்டுகிறது.

08 May 2021, 15:12