தேடுதல்

Vatican News
கர்தினால் பீட்டர் டர்க்சன் கர்தினால் பீட்டர் டர்க்சன்  

Laudato si’ பணித்தளத் திட்டம் குறித்த செய்தியாளர் கூட்டம்

சஹாரா பாலைநிலம் மேலும் விரிவடைவதைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்கென, Vivianne Harr என்ற இளைஞர், டுவிட்டர் வலைத்தள அமைப்பின் இணை நிறுவனரிடமிருந்து, பத்து இலட்சம் டாலர் நிதியுதவியைப் பெற்றார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மே 25, இச்செவ்வாயன்று, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் தலைமையில், குழு ஒன்று, Laudato si' ஆண்டு நிறைவு, மற்றும், Laudato si’ ஏழாண்டு பணித்தளத் திட்டத்தின் துவக்கம், ஆகிய இரண்டு நிகழ்வுகள் பற்றி செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவித்தது.

2020ம் ஆண்டு மே மாதம் 24ம் தேதி முதல், இவ்வாண்டு மே 24ம் தேதி வரை இடம்பெற்ற Laudato si' ஆண்டை, சிறப்பாகக் கொண்டாடுவதற்கு, கோவிட்-19 பெருந்தொற்று ஒரு தடையாக இருந்தது என்றுரைத்த கர்தினால் டர்க்சன் அவர்கள், இவ்வாண்டில், தலத்திருஅவைகள், பல்வேறு இயக்கங்கள், அமைப்புகள் போன்ற அனைத்தும், படைப்பைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில், மிகுந்த ஆர்வமுடன் பணியாற்றின என்று கூறினார்.  

எடுத்துக்காட்டாக, பங்களாதேஷ் கத்தோலிக்கத் திருஅவை, நான்கு இலட்சம் கத்தோலிக்கரின் உதவியோடு, ஏழு இலட்சத்திற்கு மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளது என்றும், ஒவ்வொரு கத்தோலிக்கருக்கும், ஏறத்தாழ இரு மரக்கன்றுகள் என்ற முறையில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், கர்தினால் டர்க்சன் அவர்கள் கூறினார்.

சஹாரா பாலைநிலம் மேலும் விரிவடைவதைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்கென, Vivianne Harr என்ற இளைஞர், டுவிட்டர் வலைத்தள அமைப்பின் இணை நிறுவனரிடமிருந்து, பத்து இலட்சம் டாலர் நிதியுதவியைப் பெற்றார் என்றும், கர்தினால் டர்க்சன் அவர்கள் எடுத்துரைத்தார்.

இவை போன்ற பல்வேறு பலன்கள், Laudato si' சிறப்பு ஆண்டில் இடம்பெற்றுள்ளன என்றும், இந்த சிறப்பு ஆண்டு, மே 16 ஞாயிறு முதல், மே 24 இத்திங்களன்று முடிந்துள்ள Laudato si' வாரத்தோடு நிறைவு பெற்றுள்ளது என்றும், கர்தினால் டர்க்சன் அவர்கள் குறிப்பிட்டார்.

Laudato si' ஆண்டு நிறைவு பெற்றுள்ளதைத் தொடர்ந்து தலத்திருஅவைகளில், Laudato si’ திருமடல் வலியுறுத்தும் செய்திகள் தொடர்ந்து இடம்பெறவிருக்கின்றன என்றுரைத்த கர்தினால் டர்க்சன் அவர்கள், Laudato si’ ஏழாண்டு பணித்தளத் திட்டங்கள் பற்றியும், செய்தியாளர் கூட்டத்தில் விளக்கினார்.

25 May 2021, 15:27