தேடுதல்

Vatican News
“Antiquum ministerium” பற்றிய செய்தியாளர் கூட்டம் “Antiquum ministerium” பற்றிய செய்தியாளர் கூட்டம் 

“Antiquum ministerium” பற்றிய செய்தியாளர் கூட்டம்

மறைக்கல்வி ஆசிரியர்களின் புதிய பணியை விரிவுபடுத்த, திருத்தந்தையோடு இணைந்து புதியவழி நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவை முயற்சிகளை மேற்கொள்ளும் - பேராயர் ஃபிசிக்கெல்லா

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்  

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மறைக்கல்வி ஆசிரியரின் திருப்பணி குறித்து எழுதியுள்ள, “Antiquum ministerium”  திருத்தூது மடலை, புதியவழி நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவையின் தலைவர் பேராயர் ரீனோ ஃபிசிக்கெல்லா அவர்களும், அந்த அவையில் மறைக்கல்விக்குப் பொறுப்பான ஆயர் Franz-Peter Tebartz-van Elst, அவர்களும், மே 11, இச்செவ்வாயன்று, செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்டனர்.

இக்கூட்டத்தில் முதலில் தன் கருத்துக்களை தெரிவித்த, பேராயர் ஃபிசிக்கெல்லா அவர்கள், திருஅவையில் மறைக்கல்வி ஆசிரியரின் திருப்பணி, கிறிஸ்தவத்தின் துவக்க காலத்திலிருந்தே நடைபெறுவது என்பதை, எளிமையாகவும், அதேநேரம், அந்த திருப்பணி இக்காலத்தில் உடனடியாக ஆற்றவேண்டியது என்ற அழைப்போடும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மூன்றாம் மில்லென்யம் திருஅவைக்கென்று, மறைக்கல்வி ஆசிரியரின் திருப்பணியை உருவாக்கியுள்ளார் என்று கூறினார்.

திருஅவையின் மறைவல்லுனரான அவிலா நகர் புனித யோவான் (1499-1569), இறைவார்த்தை, மற்றும், திருஅவையின் வாழ்வுப் போதனைகளின் அழகை, அனைவருக்கும் ஏற்ற மொழியில் அறிவித்தார், அந்த புனிதரின் திருநாளில் திருத்தந்தை இந்த திருத்தூது மடலில் கையெழுத்திட்டிருப்பது குறிப்பிடத்தக்கது என்று, பேராயர் தெரிவித்தார்.

திருஅவையின் வளர்ச்சிக்கும், வாழ்வுக்கும், மேய்ப்பர்களோடு சேர்ந்து, தாங்களும் பணியாற்ற அழைக்கப்பட்டுள்ளதை பொதுநிலையினர் உணரவேண்டும் என்று, திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள், 1975ம் ஆண்டில் வெளியிட்ட, Evangelii nuntiandi (பத்தி. 73) திருத்தூது அறிவுரை மடலில் கூறியிருப்பதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது இப்போதைய திருத்தூது மடலில் உயிரூட்டம் தந்துள்ளார் என்று, பேராயர் ஃபிசிக்கெல்லா அவர்கள் எடுத்துரைத்தார்.

நற்செய்தி அறிவிப்புப்பணி வடிவில், மறைக்கல்விக்கு தங்களை அர்ப்பணிக்க விரும்பும் பொதுநிலையினரை ஊக்கப்படுத்த, தலத்திருஅவைகளுக்கு, திருத்தந்தையின் இம்மடல் உதவும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ள, பேராயர் ஃபிசிக்கெல்லா அவர்கள்,  மறைக்கல்வி ஆசிரியர்களின் இப்புதிய பணியை விரிவுபடுத்த, தனது திருப்பீட அவை முயற்சிகளை மேற்கொள்ளும் என்று உறுதி கூறினார்.

11 May 2021, 14:57