தேடுதல்

Vatican News
தாய்லாந்தில் புத்தமத தலைவரைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் 2019 தாய்லாந்தில் புத்தமத தலைவரைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் 2019  (Vatican Media)

புத்த மதத்தினர் திருநாள் - பல்சமய உரையாடல் அவையின் வாழ்த்து

வேஸாக் திருநாளன்று பகிர்ந்துகொள்ளப்படும் வாழ்த்துக்கள், புத்த, கிறிஸ்தவ மதங்களில் பொதுவாகக் காணப்படும் உயர்ந்த விழுமியங்களை பறைசாற்றுகின்றன

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கௌதம புத்தரின் பிறப்பு, அறிவொளி அடைதல், இவ்வுலகைவிட்டுச் செல்லுதல் ஆகியவற்றைக் கொண்டாடும் வேஸாக் திருநாள், உலகெங்கும் வாழும் புத்தர்களின் உள்ளங்களில், ஆனந்தம், அமைதி மற்றும் நம்பிக்கையைக் கொணர்வதாக என்று, பல்சமய உரையாடல் திருப்பீட அவை, மே 26, இப்புதனன்று வெளியிட்ட ஒரு செய்தியில் கூறியுள்ளது.

மே 26, இப்புதனன்று, உலகெங்கும் வாழும் புத்த மதத்தினர், புத்த ஜெயந்தி, அல்லது, புத்த பூர்ணிமா என்றழைக்கப்படும் வேஸாக் திருநாளைக் கொண்டாடுவதையொட்டி, பல்சமய உரையாடல் திருப்பீட அவை, 'புத்தர்களும் கிறிஸ்தவர்களும்: அக்கறையும், ஒருங்கிணைப்பும் கொண்ட கலாச்சாரத்தை வளர்ப்பது' என்ற மையக்கருத்துடன் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கியுள்ள நெருக்கடி, மனித சமுதாயத்திற்கு புதிய வழிகளில் பணியாற்றுமாறு, அனைத்து மதங்களையும் அழைக்கிறது என்று கூறும் இச்செய்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட Fratelli tutti திருமடலில், 'யாரும் தனியே காப்பாற்றப்படுவதில்லை' (Fratelli tutti 32) என்று கூறியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.

வேஸாக் திருநாளன்று பகிர்ந்துகொள்ளப்படும் வாழ்த்துக்கள், புத்த, கிறிஸ்தவ மதங்களில் பொதுவாகக் காணப்படும் உயர்ந்த விழுமியங்களை பறைசாற்றுகின்றன என்று கூறும் இச்செய்தி, கடினமான நேரங்களில், ஞானமும், கூட்டுறவு முயற்சிகளும் தேவை என்பதை, இரு மதங்களும் வலியுறுத்துகின்றன என்று எடுத்துரைக்கிறது.

நாம் தற்போது சந்தித்துவரும் கோவிட்-19 பெருந்தொற்று சூழல், நம்மிடையே நிலவும் நட்பை இன்னும் உறுதிபெறச் செய்து, மனித சமுதாயத்திற்குப் பணியாற்றுவதில் நம்மை இன்னும் அதிகமாக ஈடுபட உதவி செய்வதாக என்று இச்செய்தி நிறைவு பெறுகிறது.

பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் மிகுவேல் ஆங்கெல் அயூசோ குவிக்ஸ்சா (Miguel Ángel Ayuso Guixot) அவர்களும், இவ்வவையின் செயலர், பேராயர் இந்துனில் கொடித்துவாக்கு (Indunil Kodithuwakku) ஆகிய இருவரின் கையொப்பங்களுடன் வேஸாக் திருநாள் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

26 May 2021, 14:00