நீதியின் வழியாக மீட்பை ஊக்குவித்த அருளாளர் Rosario Livatino
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
திருஅவை வரலாற்றில் முதன்முறையாக நீதிபதி ஒருவர், அருளாளராக அறிவிக்கப்பட்டதை கௌரவிக்கும்வண்ணம், 'மாபியா குழுவினரைப் புறந்தள்ளுதல்' என்ற பெயரில், திருப்பீடக் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையினால் உருவாக்கப்பட்டுள்ள இக்குழு, உலகின் ஆயர்களுடன் இணைந்து, மாபியா கும்பல்களுக்கு எதிரான முயற்சிகளை செயல்படுத்துவது குறித்து திட்டமிடும்.
28 ஆண்டுகளுக்கு முன்னர், திருஅவையால், மறைசாட்சியாக அறிவிக்கப்பட்ட நீதிபதி Rosario Angelo Livatino அவர்கள், மே மாதம் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று, இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள Agrigento நகர் கோவிலில், அருளாளராக அறிவிக்கப்பட்டார்.
புதிய அருளார் குறித்து தன் ஞாயிறு வானக அரசியே வாழ்த்தொலி உரைக்குப்பின் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நீதியின் வழியாக மீட்பை ஊக்குவித்த அருளாளர் Rosario Livatino அவர்களை, இக்காலத்தின் அனைத்து நீதிபதிகளும் பின்பற்றவேண்டும் என அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.
நீதி மற்றும் விசுவாசத்தின் மறைசாட்சியான Rosario Livatino அவர்கள், இலஞ்ச ஊழலில் தன்னை இழக்காதது மட்டுமல்ல, மற்றவர்களை தீர்ப்பிட நீதியைப் பயன்படுத்தாமல், அவர்களை மீட்கவே அதனைப் பயன்படுத்தினார் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாபியா கும்பலின் தாக்குதலுக்கு பலியாகி, அவர் வீரத்துவ மரணம் அடைந்ததை சுட்டிக்காட்டினார்.
நேர்மையான நீதிபதியாக செயல்பட்ட Rosario Livatino அவர்கள், மாபியா கும்பலால் 1990ம் ஆண்டு கொல்லப்பட்டார். இவரை அருளாளராக இந்த ஞாயிற்றுக்கிழமையன்று அறிவித்துள்ளது திருஅவை.