தேடுதல்

கர்தினால் கொர்னேலியுஸ் சிம் கர்தினால் கொர்னேலியுஸ் சிம்  

புரூனெய் நாட்டு ஒரே கர்தினால் சிம், இறைபதம் சேர்ந்தார்

கர்தினால் சிம் அவர்கள், 1951ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி பிறந்தவர். 69 வயது நிரம்பிய இவரது இறப்போடு, தற்போது கர்தினால்கள் அவையில், 87 நாடுகளைச் சேர்ந்த கர்தினால்கள் உள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

புரூனெய் நாட்டிற்கு, முதல் முறையாக நியமிக்கப்பட்ட, அந்நாட்டைச் சேர்ந்த கர்தினால் கொர்னேலியுஸ் சிம் (Cornelius Sim) அவர்கள், தாய்வான் மருத்துவமனை ஒன்றில், புற்றுநோய்க்காகச் சிகிச்சை பெற்றுவந்தவேளையில், தனது 69வது வயதில், மே 29, இச்சனிக்கிழமையன்று, மாரடைப்பால் இறைபதம் சேர்ந்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கர்தினால் சிம் அவர்களை, 2020ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி கர்தினாலாக உயர்த்தினார். இவர், 2020ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி, அருள்பணியாளர் பேராயத்தின் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.

புரூனெய் நாட்டு கத்தோலிக்கரின் திருத்தூதுப் பிரதிநிதியாகப் பணியாற்றிவந்த கர்தினால் சிம் அவர்களின் இறப்பு குறித்து இரங்கல் செய்தி வெளியிட்ட, மலேசியா-சிங்கப்பூர்-புரூனெய் ஆயர் பேரவையின் தலைவர், ஆயர் செபஸ்டியான் பிரான்சிஸ் அவர்கள், புரூனெய் நாட்டு சமுதாயத்தோடு தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளார்.

புரூனெய் நாட்டு கர்தினால் சிம் அவர்களின் இறப்போடு, திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 222 ஆகவும், இவர்களில் புதிய திருத்தந்தை ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய கர்தினால்களின் எண்ணிக்கை 125 ஆகவும் மாறியுள்ளன.

1951ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி பிறந்த கர்தினால் சிம் அவர்கள், 1989ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி, அந்நாட்டைச் சேர்ந்த முதல் அருள்பணியாளராகவும், 2005ம் ஆண்டு சனவரி 21ம் தேதி, அந்நாட்டைச் சேர்ந்த முதல் ஆயராகவும், திருப்பொழிவு பெற்றார். இவர், 2004ம் ஆண்டில், புரூனெய் திருத்தூது பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டார்.

கர்தினால் சிம் அவர்களின் இறப்போடு, தற்போது கர்தினால்கள் அவையில், 87 நாடுகளைச் சேர்ந்த கர்தினால்கள் உள்ளனர்.

29 May 2021, 14:58