தேடுதல்

Vatican News
ஏவுகணைகளைக் கொண்டு காசாப் பகுதியைத் தாக்கும் இஸ்ரேல் இராணுவம் ஏவுகணைகளைக் கொண்டு காசாப் பகுதியைத் தாக்கும் இஸ்ரேல் இராணுவம்  (AFP or licensors)

புனித பூமியில் உடனடி போர்நிறுத்தம் தேவை – கர்தினால் பரோலின்

போர்நிறுத்தம் கோரி, உலகின் பல நாடுகள் விடுத்துவரும் விண்ணப்பங்களுக்கு, இஸ்ரேல் அரசும், பாலஸ்தீனிய போராளிகளும் செவிமடுக்காமல் இருப்பது, திருத்தந்தைக்கும், திருப்பீடத்தில் இருப்போருக்கும் கவலையை உருவாக்கியுள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

போர்நிறுத்தம் கோரி, உலகின் பல நாடுகள் விடுத்துவரும் விண்ணப்பங்களுக்கு, இஸ்ரேல் அரசும், பாலஸ்தீனிய போராளிகளும் செவிமடுக்காமல் இருப்பது, திருத்தந்தைக்கும், திருப்பீடத்தில் இருப்போருக்கும் கவலையை உருவாக்கியுள்ளது என்று, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கூறினார்.

இத்தாலிய அரசின் சார்பில் திருப்பீடத்தில் பணியாற்றும் தூதரகம், மே 18, இச்செவ்வாயன்று ஏற்பாடு செய்திருந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய கர்தினால் பரோலின் அவர்கள், இஸ்ரேல் அரசுக்கும், ஹமாஸ் குழுவுக்கும் இடையே ஒவ்வொருநாளும் கூடிவரும் மோதல்கள், பெரும் கவலையை விளைவித்துள்ளதென்று கூறினார்.

பெரும் அழிவையும், மரணங்களையும் கொணர்ந்துள்ள இந்த மோதலில், குழந்தைகள் பெரும்பாலான எண்ணிக்கையில் கொல்லப்பட்டிருப்பதைக் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஞாயிறு வழங்கிய 'வானக அரசியே' வாழ்த்தொலி உரையில் கூறியதை, கர்தினால் பரோலின் அவர்கள் நினைவுகூர்ந்தார்.

போர்நிறுத்தத்தைக் கொணர, திருப்பீடம் தலையிடுமா என்ற கேள்வி எழுந்தபோது, இஸ்ரேல் அரசும், பாலஸ்தீனிய போராளிகளும் யாருடைய தலையீட்டையும் விரும்பவில்லை என்று திட்டவட்டமாகக் கூறியிருப்பதை, கர்தினால் பரோலின் அவர்கள் சுட்டிக்காட்டி, இருப்பினும், வாய்ப்பு கிடைத்தால், இவ்விரு நாடுகளும், இரு நாடுகள் தீர்வை நோக்கிச் செல்வதற்கு, திருப்பீடம், உதவிகள் செய்ய தயாராக இருப்பதாகக் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர், Ursula von der Leyen அவர்கள், மே 22, வருகிற சனிக்கிழமை, திருத்தந்தையைச் சந்திக்கவிருப்பதைக் குறிப்பிட்ட கர்தினால் பரோலின் அவர்கள், இச்சந்திப்பின்போது, இஸ்ரேல்-பாலஸ்தீன நெருக்கடியைக் குறித்த ஆலோசனைகள் கட்டாயம் இடம்பெறும் என்று தான் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

19 May 2021, 14:43