தேடுதல்

புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர் பிரிவின் ஒருங்கிணைப்பாளர், கர்தினால் மைக்கில் செர்னி புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர் பிரிவின் ஒருங்கிணைப்பாளர், கர்தினால் மைக்கில் செர்னி 

திருத்தந்தையின் செய்தியை வெளியிட்ட கர்தினால் செர்னி

நாம் அனைவரும் ஒரே படகில் பயணம் செய்கிறோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பயன்படுத்தும் உருவகம், கடலில், பாதுகாப்பற்ற படகுகளில் பயணம் செய்து, உயிரிழந்துவரும் புலம்பெயர்ந்தோரை நமக்கு நினைவுறுத்துகிறது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலகளாவிய இந்தப் பெருந்தொற்றிலிருந்து வெளியேறும் வேளையில், நாம் அனைவரும் இணைந்து, உன்னதமானதோர் உலகை உருவாக்கமுடியும், அல்லது, நம்மைப்பற்றி மட்டும் சிந்திக்கும் சுயநல உலகை உருவாக்கமுடியும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் Fratelli tutti திருமடலில் கூறியுள்ளதை, மீண்டும் ஒருமுறை, தான் வ்ழங்கியுள்ள உலகச்செய்தியில் நினைவுறுத்தியுள்ளார் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

இவ்வாண்டு செப்டம்பர் 26ம் தேதி, ஞாயிறன்று கடைபிடிக்கப்படும் 107வது புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் உலக நாளுக்கென "இன்னும் விரிவடைந்த 'நாம்'-ஐ நோக்கி" என்ற தலைப்பில், திருத்தந்தை உருவாக்கியுள்ள செய்தி, மே 6, இவ்வியாழனன்று திருப்பீடத்தில் வெளியிடப்பட்டது.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின், புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர் பிரிவின் ஒருங்கிணைப்பாளர், கர்தினால் மைக்கில் செர்னி அவர்கள், இச்செய்தி வெளியிடப்பட்ட செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில், திருத்தந்தை வெளியிட்ட Fratelli tutti திருமடலுக்கும், இன்று வழங்கியுள்ள உலகச்செய்திக்கும் இடையே உள்ள ஒப்புமைகளை வெளிச்சமிட்டுக் காட்டினார்.

கோவிட்-19 என்ற புயலும், அலைகளும் சூழ்ந்துள்ள இன்றைய உலகில், நாம் அனைவரும் ஒரே படகில் பயணம் செய்கிறோம் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செய்தியில் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டிய கர்தினால் செர்னி அவர்கள், இந்த உருவகம், கடலில், பாதுகாப்பற்ற படகுகளில் பயணம் செய்து, உயிரிழந்துவரும் புலம்பெயர்ந்தோரை மீண்டும் நமக்கு நினைவுறுத்துகிறது என்று கூறினார்.

"இன்னும் விரிவடைந்த 'நாம்'-ஐ நோக்கி" என்ற இந்த உலக நாள் செய்தி வெளியிடப்பட்ட நிகழ்வில், புலம்பெயர்ந்தோர்-குடிபெயர்ந்தோர் பிரிவின் நேரடிச் செயலர்களான, அருள்பணி Fabio Baggio, மற்றும் அருள் சகோதரி Alessandra Smerilli அவர்களும், கலந்துகொண்டனர்.

107வது புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் உலக நாளுக்கென திருத்தந்தை வழங்கியுள்ள செய்தி வெளியிடப்பட்ட இந்நிகழ்வு, மே 6 இவ்வியாழனன்று காலை 11.30 மணியிலிருந்து, வத்திக்கான் வலைத்தளம் வழியாகவும், YouTube வழியாகவும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 May 2021, 14:28