தேடுதல்

Vatican News
அடக்கச் சடங்கிற்கு முன்னான இராணுவ ஊர்வலம் அடக்கச் சடங்கிற்கு முன்னான இராணுவ ஊர்வலம் 

800க்கும் மேற்பட்ட பிறரன்பு அமைப்புக்களுக்கு புரவலர்

கிரேக்க நாட்டில் பிறந்த பிரபு பிலிப்பு மவுண்ட்பேட்டன் அவர்கள், தான் குடிபுகுந்த இங்கிலாந்திற்காக தன்னால் இயன்ற அனைத்தையும் ஆற்றியுள்ளார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

Edinburgh பிரபுவும், இங்கிலாந்து அரசி எலிசபெத் அவர்களின் கணவருமான பிலிப்பு அவர்கள் மரணமடைந்தது, நம் வரலாற்றில் ஒரு பெரிய இழப்பைக் குறிப்பிடுவதாக உள்ளது என, ஏப்ரல் 17, இச்சனிக்கிழமை காலைத் திருப்பலியில் குறிப்பிட்டார், பேராயர் பால் ரிச்சர்டு காலகர்.

இம்மாதம் 9ம் தேதி இறைபதம் சேர்ந்த எடின்பர்க் பிரபுவின் உடல், இச்சனிக்கிழமையன்று அடக்கம் செய்யப்படுவதையொட்டி உரோம் நகரிலுள்ள அனைத்துப் புனிதர்கள் கோவிலில் இரங்கல் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய, பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் காலகர் அவர்கள், ஏறத்தாழ எழுபது ஆண்டுகள், இங்கிலாந்து அரசியுடன் இணைந்து எடின்பர்க் பிரபு, உதவியுள்ளதை எடுத்துரைத்தார்.

பிரித்தானிய இராணுவப் பணிகளுக்கு மிகுந்த ஆதரவை அளித்து வந்த பிரபு பிலிப்பு அவர்கள், 800க்கும் மேற்பட்ட பிறரன்பு அமைப்புக்களுக்கு புரவலராக இருந்துவருகிறார் என்பதையும் பெருமையுடன் குறிப்பிட்டார் பேராயர் காலகர்.

கிரேக்க நாட்டில் பிறந்த பிரபு பிலிப்பு மவுண்ட்பேட்டன் அவர்கள், தான் குடிபுகுந்த இங்கிலாந்திற்காக தன்னால் முயன்ற அனைத்தையும் ஆற்றியுள்ளார் என்ற திருப்பீட வெளியுறவுச் செயலர், பேராயர் காலகர் அவர்கள், இளையோரின் வாழ்வு முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் வழியாக பிரபு பிலிப்பு அவர்கள் பங்காற்றியுள்ளார் என தெரிவித்தார்.

இங்கிலாந்து அரசியுடன் 73 ஆண்டு திருமணம், மற்றும் அரசியின் 69 ஆண்டு காலஆட்சி ஆகியவை வழியாக, இங்கிலாந்து நாட்டிற்கு பிரபு பிலிப்பு ஆற்றியுள்ள பங்களிப்பு மிகவும் குறிப்பிடும்படியானது என்று கூறிய பேராயர் காலகர் அவர்கள், கடற்படைத்தலைவராகவும், கணவராகவும், குடும்பத் தலைவராகவும், பிரபு பிலிப்பு அவர்கள் ஆற்றியுள்ள பணிகள், பசுமைக் காட்டில் புதிய மரங்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துபவைகளாக உள்ளன என மேலும் எடுத்துரைத்தார். 

17 April 2021, 15:16