தேடுதல்

அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடும்பங்கள் உலக மாநாடு (2015.09.26) அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடும்பங்கள் உலக மாநாடு (2015.09.26)  

10வது குடும்பங்கள் உலக மாநாட்டிற்கு இறைவேண்டல்

1994ம் ஆண்டை, ஐ.நா. நிறுவனம் உலக குடும்ப ஆண்டாக அறிவித்து சிறப்பித்தபோது, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், திருஅவையில் குடும்பங்கள் உலக மாநாட்டை உருவாக்கினார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

2022ம் ஆண்டு ஜூன் மாதம் 22ம் தேதி முதல், 26ம் தேதி வரை, உரோம் மாநகரில் நடைபெறவிருக்கும், பத்தாவது குடும்பங்கள் உலக மாநாட்டிற்குத் தயாரிப்பாகச் சொல்லப்படும் இறைவேண்டலை, பொதுநிலையினர், குடும்பம், மற்றும், வாழ்வு திருப்பீட அவையும், உரோம் மறைமாவட்டமும் இணைந்து வெளியிட்டுள்ளன.

இந்த பத்தாவது குடும்பங்கள் உலக மாநாட்டிற்கு (WMOF), திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவுசெய்துள்ள, “குடும்ப அன்பு: ஓர் அழைப்பு, மற்றும், புனிதத்துவத்திற்கு ஒரு வழி” என்ற தலைப்பை மையப்படுத்தியதாக, இந்த இறைவேண்டல் அமைந்துள்ளது.

குடும்பம், பங்குத்தளம், மறைமாவட்டம்

இந்த அதிகாரப்பூர்வ இறைவேண்டலை, ஓர் அறிக்கையின் வழியாக வெளியிட்டுள்ள பொதுநிலையினர், குடும்பம், மற்றும், வாழ்வு திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Joseph Kevin Farrell அவர்கள், அன்பின் மகிழ்வு குடும்ப ஆண்டின் பொருளுணர்ந்து, அதை சிறப்பாகக் கொண்டாடுவதற்கு, இந்த இறைவேண்டல் உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.  

உரோம் மாநகரில் நடைபெறவிருக்கும், இந்த குடும்ப நிகழ்வில் கலந்துகொள்வதற்கு, பல குடும்பங்களும், குழுமங்களும், ஆன்மீக வழியிலும், மற்ற வழிகளிலும் தயாரிக்கத் தொடங்கியுள்ள இவ்வேளையில், அத்தயாரிப்புக்கு, இந்த இறைவேண்டல் உறுதுணையாக இருக்கும் என்றும், கர்தினால் Farrell அவர்கள் கூறியுள்ளார்.

கர்தினால் Angelo De Donatis

உரோம் மறைமாவட்டத்தின் திருத்தந்தையின் பிரதிநிதியாகிய, கர்தினால் Angelo De Donatis அவர்கள், இந்த இறைவேண்டல் குறித்து விளக்கியவேளையில், குடும்பங்களைப் பொருத்தவரை, கோவிட்-19 பெருந்தொற்று, திருஅவைக்கு முன்வைத்துள்ள புதிய சவால்களை, நம்பிக்கையின் ஒளியில், தெளிந்துதேர்வுசெய்ய உதவுவதோடு, திருஅவையின் பணிகளுக்கு வழிகாட்டியாகவும், இந்த இறைவேண்டல் அமையும் என்று கூறியுள்ளார்.

இந்த இறைவேண்டல் 10வது குடும்பங்கள் உலக மாநாட்டின் தயாரிப்புகளுக்கு மையமாக அமையும் என்றும், இந்த மாநாட்டை நடத்துவதில் உரோம் மறைமாவட்டம் மகிழ்கின்றது என்றும், கர்தினால் De Donatis அவர்கள் கூறியுள்ளார்.

குடும்பங்கள் உலக மாநாடு

1994ம் ஆண்டை, ஐக்கிய நாடுகள் நிறுவனம் உலக குடும்ப ஆண்டாக அறிவித்து சிறப்பித்தபோது, திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்கள், திருஅவையில் குடும்பங்கள் உலக மாநாட்டை உருவாக்கினார். அதே ஆண்டு அக்டோபர் 8, 9 ஆகிய தேதிகளில், திருஅவை, உரோம் மாநகரில் குடும்பங்கள் முதல் உலக மாநாட்டை நடத்தியது. இந்த மாநாடு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, உலகின் பல்வேறு பகுதிகளில் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 April 2021, 14:56