தேடுதல்

புலம்பெயர்ந்தோர் முகாமில் கர்தினால் டர்க்சன் புலம்பெயர்ந்தோர் முகாமில் கர்தினால் டர்க்சன் 

உலக நல நாள் செய்தி – கர்தினால் பீட்டர் டர்க்சன்

கர்தினால் டர்க்சன் - நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் பொறுப்பானவர்கள் என்பதையும், நாம் நலமாக இருப்பதற்கு, அடுத்தவரும் நலமாக இருக்கவேண்டும் என்பதையும் இந்த பெருந்தொற்று காலம் தெளிவாக உணர்த்தியுள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மனித வரலாற்றில், 'முன்னும்', 'பின்னும்' என்ற முத்திரைகளைப் பதித்த ஆண்டாக 2020ம் ஆண்டு அமைந்தது என்று, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் கூறியுள்ளார்.

"இன்னும் நீதியான, நலமான உலகை அனைவருக்கும் கட்டியெழுப்ப" என்ற தலைப்பில், உலக நல நாள், ஏப்ரல் 7, இப்புதனன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி, கர்தினால் டர்க்சன் அவர்கள், செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

இவ்வாண்டுக்கென தேர்ந்தெடுக்கப்பட்ட கருத்து, இவ்வுலகில் நீதியும், நலமும் அனைவருக்கும் சமமாகக் கிடைப்பதில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது என்று கூறிய கர்தினால் டர்க்சன் அவர்கள், நம்மிடையே ஆண்டாண்டு காலமாக நிலவிவந்த சமமற்ற நிலை, கோவிட்-19 பெருந்தொற்றினால் இன்னும் கூடுதலாக வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பெருந்தொற்றிலிருந்து வெளியேறும்போது, நாம் பழைய நிலைக்கே திரும்பிச்செல்ல இயலாது, ஒன்று, இப்போது உள்ளதைக் காட்டிலும் உயர்ந்த நிலையிலோ, மிக மோசமான நிலையிலோ நாம் வெளியேற முடியும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ள கருத்தை, கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் செய்தியில் நினைவுகூர்ந்துள்ளார்.

நம்மிடையே வாழும் வறியோர் சந்தித்துவரும் பல்வேறு இழப்புக்கள் இந்த பெருந்தொற்று நேரத்தில் தெளிவாகத் தெரிந்தன என்று கூறியுள்ள கர்தினால் டர்க்சன் அவர்கள், குறிப்பாக, இவர்களுக்குத் தேவையான நலவாழ்வு வசதிகள் மறுக்கப்பட்டுள்ளது, பெரும் வேதனையைத் தருகிறது என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளார்.

நாம் அனைவரும் உடன்பிறந்தோர் என்பதையும், ஒருவருக்கொருவர் பொறுப்பானவர்கள் என்பதையும், நாம் நலமாக இருப்பதற்கு, அடுத்தவரும் நலமாக இருக்கவேண்டும் என்பதையும் இந்த பெருந்தொற்று காலம் நமக்குத் தெளிவாக உணர்த்தியுள்ளது என்று கர்தினால் டர்க்சன் அவர்கள், இச்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனி மனிதரின் உடல் நலத்தை மட்டும் முன்னேற்றுவது தீர்வாக அமையாது, மாறாக, அவரது, மனநலம், அறிவுத்திறன், சமுதாய, கலாச்சார நலம், ஆன்மீக நலம் என்று அனைத்து தரப்புக்களிலும் முழுமையான முன்னேற்றம் கிடைப்பதை உறுதி செய்வது அவசியம் என்பதை, கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

உலக நல நாள் வரலாறு

நலவாழ்வு குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்துடன், உலக நலவாழ்வு நிறுவனமான WHO மற்றும் அதனுடன் தொடர்புள்ள ஏனைய நிறுவனங்கள், ஏப்ரல் 7ம் தேதியை, உலக நல நாள் என்று சிறப்பிக்க அழைப்பு விடுத்தன.

1950ம் ஆண்டு முதல் சிறப்பிக்கப்படும் இந்த உலக நாளுக்கு ஒவ்வோர் ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருத்து மையக்கருத்தாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்று பெருமளவு பரவியிருந்த 2020ம் ஆண்டில், "தாதியரையும், நலப்பணியாளரையும் ஆதரிப்போம்" என்பது மையக்கருத்தாகவும், "இன்னும் நீதியான, நலமான உலகை அனைவருக்கும் கட்டியெழுப்ப" என்பது, இவ்வாண்டின் மையக்கருத்தாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 April 2021, 16:29