தேடுதல்

கர்தினால் Edward Cassidy கர்தினால் Edward Cassidy 

ஆஸ்திரேலிய கர்தினால் Cassidy இறைவனடி சேர்ந்தார்

கர்தினால் Cassidy அவர்கள், கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவை, யூத மதத்தினருடன் நல்லுறவை வளர்க்கும் திருப்பீட குழு ஆகியவற்றின் தலைவராகப் பணியாற்றியிருப்பவர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் முன்னாள் தலைவரான ஆஸ்திரேலிய கர்தினால் Edward Cassidy அவர்கள், தனது 96வது வயதில், ஏப்ரல் 10, இச்சனிக்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார்.

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் 1924ம் ஆண்டு பிறந்த கர்தினால் Cassidy அவர்கள், 1949ம் ஆண்டில் அருள்பணித்துவ வாழ்வுக்குத் திருநிலைப்படுத்தப்பட்டார். உரோம் இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் திருஅவை சட்டத்தில் முதுகலை பட்டம் பெற்ற இவர், திருப்பீடத்தின் தூதரகப் பணிகள் கல்வியையும் முடித்தார். ஆசியா, ஆப்ரிக்கா, இலத்தீன் அமெரிக்கா, மற்றும், ஐரோப்பாவில் அமைந்துள்ள திருப்பீடத் தூதரகங்களில், ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் பணியாற்றியுள்ள இவர், 1989ம் ஆண்டில் கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் தலைவராக நியமிக்கப்பட்டார். 1991ம் ஆண்டில் கர்தினாலாக உயர்த்தப்பட்ட இவர், 2001ம் ஆண்டில், தன் 76வது வயதில் பணி ஓய்வு பெற்றார்.

கர்தினால் Cassidy அவர்கள், மதத்திற்கும், பன்னாட்டு விவகாரங்களுக்கும் ஆற்றிய நற்பணிகளை பாராட்டும் விதமாக, 1990ம் ஆண்டில், Companion of the Order of Australia (AC) என்ற பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டது.

கர்தினால் Edward Cassidy அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள சிட்னி உயர்மறைமாவட்ட பேராயர் Anthony Fisher அவர்கள், கர்தினால் Cassidy அவர்கள், திருஅவைக்கு, குறிப்பாக, கிறிஸ்தவ ஒன்றிப்புப் பணிக்கு, சிறப்பானதொரு மரபுச்செல்வத்தை விட்டுச்சென்றுள்ளார், இவர் வியத்தகு கடவுளின் மனிதர் என்று பாராட்டியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 April 2021, 15:18