தேடுதல்

வத்திக்கான் அருங்காட்சியக கலைகள் வலைக்காட்சியில்

உலக அளவில் புகழ்பெற்ற வத்திக்கான் அருங்காட்சியகம், 16ம் நூற்றாண்டில், திருத்தந்தை 2ம் ஜூலியஸ் அவர்களால் உருவாக்கப்பட்டது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வத்திக்கான் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள திருத்தந்தையரின் சேகரிப்புக் கலைகளில் மறைந்துள்ள கதைகளை விவரிக்கும் புதிய வலைக்காட்சித் தொடர்களை, வத்திக்கான் செய்தித்துறையின் ஒத்துழைப்போடு, வத்திக்கான் அருங்காட்சியகம் ஆரம்பித்துள்ளது என்று, ஏப்ரல் 20, இச்செவ்வாயன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்புதிய தொடர் குறித்து அறிக்கை வெளியிட்ட, வத்திக்கான் அருங்காட்சியகக் குழுவினர், இந்த அருங்காட்சியகத்திலுள்ள, மாபெரும் கலைஞர்களின் மிகச்சிறந்த படைப்புக்களின் அழகில் மறைந்துள்ள இரகசியங்களை அறிவதற்கு ஆர்வமாய் உள்ள மக்களுக்கு உதவும் முறையில், இப்புதிய தொடர் தொடங்கப்படுகின்றது என்றும் கூறியுள்ளனர்.

ஏப்ரல் 20, இச்செவ்வாயன்று தொடங்கப்பட்டுள்ள இப்புதிய வலைக்காட்சித் தொடரில், திருத்தந்தையரால் சேகரிக்கப்பட்ட கலைகளில் மறைந்திருக்கும் மறையுண்மைகளை, விளக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வத்திக்கான் அருங்காட்சியகத்தின் கலைகளில் வெளிப்படும் அறிவை வைத்து, அது, “உலகின் பள்ளி” என்று, அதை வடிவமைத்த கலைஞர்கள் கூறியிருக்கின்றனர் என்றும், இந்த தொடர்கள், அந்த அருங்காட்சியகத்தை புதிய கண்ணோட்டத்தோடு நோக்க உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உலக அளவில் புகழ்பெற்ற வத்திக்கான் அருங்காட்சியகம், ஏறத்தாழ எழுபதாயிரம் கலைவேலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்றது. இவற்றில் இருபதாயிரமே பொதுவில் வைக்கப்பட்டுள்ளது. 16ம் நூற்றாண்டில், திருத்தந்தை 2ம் ஜூலியஸ் அவர்களால் இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டது. சிஸ்டீன் சிற்றாலயத்திலுள்ள மிக்கேல் ஆஞ்சலோவின் ஓவியங்கள், கலைஞர் Raphael அவர்களின் அறையிலுள்ள அவரது ஓவியம் மிகவும் புகழ்பெற்றவை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 April 2021, 15:40