தேடுதல்

Vatican News
நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே 

குழந்தைக்குத் தரக்கூடிய உயர்ந்த பரிசு, மத நம்பிக்கையே

தங்கள் குழந்தைக்கு, உணவு, உறைவிடம், கல்வி, நன்னெறி ஆகியவற்றை கவனமாக வழங்கும் பெற்றோர், மத நம்பிக்கை என்ற கொடையையும் தவறாமல் வழங்க கடமைப்பட்டுள்ளனர் - கர்தினால் தாக்லே

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நம்பிக்கைப் பயணத்தின் துவக்கம் திருமுழுக்கு என்றும், தங்கள் குழந்தைக்கு, உணவு, உறைவிடம், கல்வி, நன்னெறி ஆகியவற்றை கவனமாக வழங்கும் பெற்றோர், அக்குழந்தைக்கு மத நம்பிக்கை என்ற கொடையையும் தவறாமல் வழங்க கடமைப்பட்டுள்ளனர் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், உரோம் நகரில் உள்ள புனித மேரி மேஜர் பெருங்கோவிலில், ஏப்ரல் 12, இத்திங்களன்று திருப்பலி நிறைவேற்றி, பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த இரு குழந்தைகளுக்கு திருமுழுக்கு வழங்கிய வேளையில், இவ்வாறு கூறினார்.

திருமுழுக்கு நாளன்று, பெற்றோரும், ஞானப் பெற்றோரும் குழந்தைகளுக்கு வழங்கப்போகும் பரிசுகளில் அதிக கவனம் செலுத்துகின்றனர் என்பதை தன் மறையுரையில் குறிப்பிட்ட கர்தினால் தாக்லே அவர்கள், பெற்றோரும், ஞானப் பெற்றோரும் குழந்தைக்குத் தரக்கூடிய விலைமதிப்பற்ற பரிசு, மத நம்பிக்கையே என்று வலியுறுத்திக் கூறினார்.   

பிலிப்பீன்ஸ் நாட்டில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் 500ம் ஆண்டு நிறைவு (1521-2021), இவ்வாண்டு முழுவதும் சிறப்பிக்கப்படுவதன் ஒரு பகுதியாக, இத்திருப்பலியும், திருமுழுக்கு அருளடையாளமும் இடம்பெற்றன என்று, பீதேஸ் செய்தி கூறுகிறது.

கோவிட்-19 பெருந்தொற்றின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, இத்திருப்பலியில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் பங்கேற்பாளர்கள் அனுமதிக்கப்பட்டனர் என்பதும், உரோம் நகரில் வாழும் பிலிப்பீன்ஸ் நாட்டு மக்களுக்கென குறிக்கப்பட்டுள்ள புனித Pudenziana பெருங்கோவிலில் இத்திருப்பலியின் நேரடி ஒளிபரப்பு இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கன.

இத்தாலி நாட்டில், குறிப்பாக, உரோம் மற்றும் மிலான் நகரங்களில், 1,50.000 பிலிப்பீன்ஸ் நாட்டு கத்தோலிக்கர் வாழ்கின்றனர் என்றும், இவர்களில், உரோம் நகரில் வாழும் 47,000த்திற்கும் அதிகமான கத்தோலிக்கர்களுக்கு, 63 குழுமங்கள் வழியே ஆன்மீக உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றும், பீதேஸ் செய்தி கூறுகிறது. (Fides)

14 April 2021, 15:34