தேடுதல்

பன்னாட்டு கூட்டம் ஒன்றில் உரை வழங்கும் திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின் - கோப்புப் படம் பன்னாட்டு கூட்டம் ஒன்றில் உரை வழங்கும் திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின் - கோப்புப் படம் 

அமைதியும், பாதுகாப்பும் மனிதரின் ஆழமான ஆவல்கள்

நம்மிடையே நிலவும், உலகளாவிய அக்கறையற்ற நிலையைக் களைந்து, உலகளாவிய ஆதரவையும், உலகளாவிய உடன்பிறந்த உணர்வையும் வளர்க்கவேண்டும் - கர்தினால் பரோலின்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் தலைமைப்பணிக்குத் தெரிவு செய்யப்பட்ட நாள் முதல், நாம் அனைவரும் உடன்பிறந்தோர் என்ற கருத்தை வலியுறுத்தி வந்துள்ளார் என்று, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், பன்னாட்டு கருத்தரங்கு ஒன்றில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.

"உடன்பிறந்த நிலை, பன்முகத்தன்மை, மற்றும் அமைதி: திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், 'அனைவரும் உடன்பிறந்தோர்' திருமடலின் விளக்கம்" என்ற தலைப்பில், ஏப்ரல் 15, இவ்வியாழனன்று, ஜெனீவாவில் நடைபெற்ற கணணிவழி மெய்நிகர் கூட்டம் ஒன்றில் கர்தினால் பரோலின் அவர்கள் வழங்கிய துவக்க உரையில் இவ்வாறு கூறினார்.

நாடுகளிடையே, செயல்திறன், மற்றும், ஒருங்கிணைப்பு ஆகிய இரு முயற்சிகளின் குறியீடுகளில் நிலவும் முரண்பட்ட கருத்துக்களை, கோவிட்-19 பெருந்தொற்று வெளிச்சத்திற்குக் கொணர்ந்துள்ளது என்று, தன் உரையில் குறிப்பிட்ட கர்தினால் பரோலின் அவர்கள், இந்த குறைபாட்டை நீக்க, உடன்பிறந்த நிலையும், பன்முகத்தன்மை செயல்பாடுகளும் உதவியாக இருக்கும் என்று எடுத்துரைத்தார்.

நாம் அனைவரும் ஒரே படகில்...

உலகினர் அனைவரின் உடல் நலத்திற்கும் ஆபத்தாக, உலகெங்கும் பரவியுள்ள பெருந்தொற்று, நாம் அனைவரும் ஒரே படகில் பயணிக்கிறோம் என்பதை உணர்த்தியிருந்தாலும், அந்த உணர்வு, விரைவில் மறைந்து, நாடுகளிடையே இந்த பெருந்தொற்று கிருமியை ஒழிக்கும் முயற்சிகளில் போட்டிகள் எழுந்துள்ளன என்பதை, கர்தினால் பரோலின் அவர்கள் வருத்தத்துடன் சுட்டிக்காட்டினார்.

நம்மிடையே நிலவும் போட்டிகளையும், சுயநல போக்குகளையும் விலக்கி, அனைவரும், உலகளாவிய நலவாழ்வை உறுதி செய்யும் முயற்சிகளில் உடன்பிறந்த உணர்வுடன் ஈடுபடவேண்டும் என்பதை, திருப்பீடம் மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வருகிறது என்று கர்தினால் பரோலின் அவர்கள் கூறினார்.

நலிவுற்றோருக்கு நாம் வழங்கும் கவனம்

மனித சமுதாயத்தில் மிகவும் நலிவுற்றோருக்கு, குறிப்பாக, புலம் பெயர்ந்தோருக்கு நாம் வழங்கும் கவனமே, உலகினர் அனைவரும் நலமுடன் வாழ்வதை உறுதிசெய்யும் என்றும், நம்மிடையே நிலவும், உலகளாவிய அக்கறையற்ற நிலையைக் களைந்து, உலகளாவிய ஆதரவையும், உலகளாவிய உடன்பிறந்த உணர்வையும் வளர்க்கவேண்டும் என்றும் கர்தினால் பரோலின் அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.

அமைதி, பாதுகாப்பு, நிரந்தரத்தன்மை ஆகியவை, அனைத்து மனிதர்களின் உள்ளங்களிலும் ஆழமாகப் பதிந்துள்ள ஆவல்கள் என்பதை, தன் உரையில் குறிப்பிட்ட கர்தினால் பரோலின் அவர்கள், இந்த ஆவல்களை, இராணுவத்தின் துணைகொண்டோ, அணு ஆயுதங்களின் துணைகொண்டோ நிறைவேற்ற முடியாது என்பதையும் தெளிவுபடுத்தினார்.

அரசுகள் வீணாக்கும் நிதி

ஆயுத உற்பத்தியிலும், ஆயுத வர்த்தகத்திலும் அரசுகள் வீணாக்கும் நிதியை, மக்களின் வாழ்வு மேம்பாட்டிற்குப் பயன்படுத்தினால், இவ்வுலகில் அமைதியும், பாதுகாப்பும் நிலைத்து நிற்கும் என்பதையும், கர்தினால் பரோலின் அவர்கள், இந்த பன்னாட்டு மெய் நிகர் கூட்டத்தில் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 April 2021, 14:32