தேடுதல்

இஸ்பானிய வானொலிக்கு பேட்டியளித்த கர்தினால் பரோலின் இஸ்பானிய வானொலிக்கு பேட்டியளித்த கர்தினால் பரோலின் 

உலக அமைதிக்காக தொடர்ந்து உழைத்து வரும் திருஅவை

கர்தினால் பரோலின் : எளிமையான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தியை அறிவிப்போர், அதற்கு நம்பத்தகுந்த சான்றாக விளங்கிடவேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

இவ்வுலகிற்கு நற்செய்தியின் நம்பத்தகும் சான்றாக விளங்கும் நோக்கத்தில், திருஅவை ஒன்றிணைந்து செயல்படவேண்டியது அவசியம் என அழைப்பு விடுத்தார் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின்.

தனக்கு கிட்டிய தேவ அழைத்தல், திருத்தந்தையுடன் திருப்பீடச் செயலரின் உறவு, இன்றைய திருஅவை, சீனா திருஅவையுடன் உறவு என பல்வேறு தலைப்புக்களில் COPE என்ற இஸ்பானிய மொழி வானொலிக்குப் பேட்டியளித்த திருப்பீடச் செயலர், கர்தினால் பரோலின் அவர்கள், நற்செய்தி அறிவித்தலுக்கும், ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கும் இடையேயுள்ள தொடர்பு குறித்து வலியுறுத்தினார்.

ஒன்றிப்புக்காகவும், திருஅவையின் விடுதலைக்காகவும், மத சுதந்திரத்திற்காகவும் உழைக்கும் திருஅவை, உலக அமைதிக்காகவும் தொடர்ந்து உழைத்துவருகிறது என்று தன் பேட்டியில் கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், தலத்திருஅவைகளுக்கும் திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் உறவுகளைப் பலப்படுத்துவதில் திருப்பீடச் செயலகம் முக்கியப் பங்காற்றி வருவதைக் குறிப்பிட்டார்.

திருஅவை தலைமைப் பீடத்தில் இடம்பெற்றுவரும் நல்மாற்றங்கள் நல்ல பலனைத் தந்துவருகின்றன என்பதையும் குறிப்பிட்ட திருப்பீடச் செயலர், எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருப்பீடச்செயலராக பொறுப்பேற்க அழைக்கப்பட்டதிலிருந்து, திருத்தந்தையுடன் இணைந்து செயலாற்றி வருவதாகத் தெரிவித்தார்.

மிகவும் எளிமையான மனிதராக செயல்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தியை அறிவிக்கும்போது, திருஅவை, தான் அறிவிப்பதற்கு தானே நம்பத்தகும் சான்றாக விளங்கவேண்டும் என்பதை வலியுறுத்திவருவதாக மேலும் கூறினார் கர்தினால் பரோலின்.

இன்றையத் திருஅவையில் பல்வேறு நிலைகளில் புதுப்பித்தலை கொண்டுவர முயலும் திருத்தந்தையின் முயற்சிகளால் முரண்பாடுகள் தோன்றிவருவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த கர்தினால் பரோலின் அவர்கள், விசுவாசம், அருளடையாளங்கள், திருத்தூதுப்பணி போன்ற, மாற்றமுடியாத உண்மை நிலைகளுக்கும், புதுப்பித்தல் தேவைப்படும் அமைப்புமுறைகள், மற்றும் வழிமுறைகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை, சிலர் சரியாகப் புரிந்துகொள்ளாதபோது, இந்த முரண்பாடுகள் தோன்றுகின்றன என கூறினார்.

துயரமான வரலாற்றை கண்டுவந்த சீனத் திருஅவையில், நம்பிக்கைக் கீற்றுகள் தெரியத் துவங்கியுள்ளன என்பதையும் சுட்டிக்காட்டிய  திருப்பீடச் செயலர், கர்தினால் பரோலின் அவர்கள், ஈராக் கிறிஸ்தவர்களின் சான்று பகரும் வாழ்வு, ஐரோப்பா தன பாரம்பரிய கிறிஸ்தவ விசுவாசத்தை இழந்து வருவது, போன்றவை குறித்தும் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 April 2021, 11:49