தேடுதல்

Vatican News
தாழ்ச்சியுடன் சேவையாற்றும் அருள்பணித்துவம்  தாழ்ச்சியுடன் சேவையாற்றும் அருள்பணித்துவம்  

அருள்பணித்துவத்தின் அடிப்படை இறையியல் குறித்த கருத்தரங்கு

வாழ்வுச் சான்றுகள் வழியாக நற்செய்தி அறிவிப்பதில், பொதுநிலையினர், அருள்பணியாளர்கள், துறவறத்தார் என அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது எதிர்பார்க்கப்படுகின்றது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

'அருள்பணித்துவத்தின் அடிப்படை இறையியலுக்காக' என்ற தலைப்பில் 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உரோம் நகரில் இடம்பெற உள்ள அனைத்துலக கருத்தரங்கு குறித்த விளக்கம் திங்கள்கிழமையன்று, திருப்பீட பத்திரிகையாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஏப்ரல் 12 அன்று, இணையத்தளத் தொடர்பு வழியாக இடம்பெற்ற இந்த மெய்நிகர் விளக்கக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆயர்கள் பேராயத்தின் தலைவர், கர்தினால் Marc Ouellet அவர்கள்,  ஒத்திசைவு (synodality) குறித்த திருஅவை ஆய்வுகளின் வரையறைக்குள், தேவ அழைத்தல்கள் குறித்த இந்த கருத்தரங்கு, வரும் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு இடம்பெறும் என்பதை உறுதிப்படுத்தினார்.

மூவாயிரமாம் ஆண்டுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் திருஅவையிடமிருந்து இறைவன் எதிர்பார்ப்பது, ஒத்திசைவே என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டு வருவதை சுட்டிக்காட்டிய கர்தினால் Ouellet அவர்கள், தேவ அழைத்தல்களைப் பொருத்தவரையில், இது மிகவும் ஆணித்தரமாக புரிந்துகொள்ளக் கூடியது என்றார்.

ஒத்திசைவு என்பது, அடிப்படையில், திருஅவையின் மறைப்பணிகளில் அனைத்து விசுவாசிகளும் உயிர்துடிப்புடன் பங்கேற்பதையே குறிப்பிடுகின்றது எனவும் எடுத்துரைத்தார் கர்தினால் Ouellet.

குடும்பம், பணியிடம், சமுதாய, மற்றும் மத வாழ்வின் தினசரி உண்மை நிலைகளின் துணைகொண்டு கட்டியெழுப்பப்படும் இறையரசை நோக்கி, திருமுழுக்கு பெற்ற அனைத்து விசுவாசிகளும் ஒன்றிணைந்து நடப்பதையே, ஒத்திசைவு குறிப்பிடுவதாகத் தெரிவித்த ஆயர்கள் பேராயத்தின் தலைவர், கர்தினால் Ouellet அவர்கள், கிறிஸ்தவ சமுதாயங்களின் சான்றுகள் வழியாக, நற்செய்தி அறிவிப்பதில், பொதுநிலையினர், அருள்பணியாளர்கள், ஆண், பெண் துறவறத்தார் ஆகிய அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதை இது எதிர்பார்க்கின்றது எனவும் தெரிவித்தார்.

இன்றைய பெருந்தொற்று துயர்கள் குறித்தும், துன்புறும் மனித குலத்திற்கு திருஅவை ஆற்றிவரும் பணிகள் குறித்தும் எடுத்துரைத்த கர்தினால் Ouellet அவர்கள், அன்புப் பணிகளுக்குரிய அழைப்புக்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று உதவுவதாக உள்ளன என்றார்.

இந்த இறையியல் கருத்தரங்கின் வழியாக திருஅவையின் மேய்ப்புப்பணி, மறைபரப்புப் பணி தொடர்புடையப் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காணமுடியாது எனினும், திருஅவையின் மறைப்பணிகளின் அடிப்படைக் குறித்து ஆழமாக புரிந்துகொள்ள இது உதவும் என்ற உறுதியையும் வழங்கிய கர்தினால் Ouellet அவர்கள், ஆயர்கள், மற்றும் அருள்பணியாளர்களின் அருள்பணித்துவத்திற்கும், திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரின் அருள்பணித்துவத்திற்கும் இடையேயுள்ள அடிப்படைத் தொடர்பு குறித்தும் விளக்கினார்.

குடும்பம், இளையோர், மற்றும் அமேசான் குறித்து தனித்தனியாக இடம்பெற்ற ஆயர் மாமன்றக்கூட்டங்களில் அறியப்பட்டவைகளின் துணையுடன், வரும் ஆண்டு இடம்பெற உள்ள இக்கருத்தரங்கு, இறையியலில் ஆர்வமுடைய அனைவருக்கும், குறிப்பாக ஆயர்களுக்கு,  பயனுடையதாக இருக்கும் எனவும் தெரிவித்த கர்தினால் Ouellet அவர்கள், வத்திக்கான் திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கில் இடம்பெற உள்ள இந்த 3 நாள் கருத்தரங்கு, ஆயர்கள் பேராயத்தால் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

2022ம் ஆண்டு இடம்பெற உள்ள கருத்தரங்கு குறித்த விளக்கக் கூட்டத்தில், கர்தினால் Ouellet அவர்களுடன் இணைந்து, உரோம் நகரின் பாப்பிறை பிரெஞ்ச் குருமடத்தின் முதல்வர், அருள்பணி Vincent Siret அவர்களும், உரோம், கிரகோரியன் பாப்பிறை கல்லூரியின் இறையியல் பேராசிரியை Michelina Tenace அவர்களும் விளக்கமளித்தனர்.

 

12 April 2021, 13:16