தேடுதல்

Vatican News
கர்தினால் ஷான் ஓ'மாலி கர்தினால் ஷான் ஓ'மாலி 

சிறியோர் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கில் கர்தினால் ஓ'மாலி

பாலியல் கொடுமைகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, பாதுகாப்பும், பராமரிப்பும் வழங்குவதற்கு, திருஅவைக்கு தார்மீகக் கடமை உள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஏப்ரல் 8, இவ்வியாழனன்று, அமெரிக்க ஐக்கிய நாட்டின் Massachusetts மாநிலத்தில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில், சிறியோரின் பாதுகாப்பை மையப்படுத்தி தொடங்கியுள்ள, பன்னாட்டு கருத்தரங்கில் உரையாற்றிய பாஸ்டன் பேராயர் கர்தினால் ஷான் ஓ'மாலி அவர்கள், பாலியல் கொடுமைகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு, கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் பணிகளை விவரித்தார்.

சிறாரின் பாதுகாப்புக்கென உருவாக்கப்பட்டுள்ள திருப்பீட அவையின் தலைவராகிய கர்தினால் ஓ'மாலி அவர்கள், குருகுலத்தாரால் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள மக்களுக்கு, குறிப்பாக, சிறியோர், இளையோர், வலுவற்ற வயதுவந்தோர் ஆகியோருக்குப் பாதுகாப்பும், பராமரிப்பும் வழங்குவதற்கு, திருஅவைக்கு தார்மீகக் கடமை உள்ளது என்பதை வலியுறுத்திக் கூறினார்.

அனைத்து மதங்கள், அரசு மற்றும், சமுதாய குழுக்களில், நாம் பணியாற்றும் மக்கள், பாதுகாப்பை எதிர்பார்ப்பதற்கு உரிமையைக் கொண்டுள்ளனர் என்றுரைத்த கர்தினால் ஓ'மாலி அவர்கள், ஆன்மாக்களைப் பராமரிப்பதற்கு, புனிதக் கடமையாற்றுகின்றவர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை மறுதலிக்கப்படும் சில நிகழ்வுகளும் உள்ளன என்பதையும் குறிப்பிட்டார். 

அனைத்துச் சூழல்களிலும், பாலியல் கொடுமை மறுதலிக்கப்படுவது, மிகக் கொடூரமானது மற்றும், அது மனித மாண்பை பாழாக்கும் முறையில் மீறுவதாகும் என்று கூறிய, கர்தினால் ஓ'மாலி அவர்கள், குருகுலத்தாரால் இடம்பெறும் பாலியல் முறைகேடுகளை ஒழிப்பதற்கு, திருஅவை தொடர்ந்து பணியாற்றி வருகிறது என்று கூறினார்.

நம் குடும்பங்களிலே, சமுதாயக் குழுக்களிலே இடம்பெறும், பாலியல் கொடுமைகள் என்ற பாவங்கள் மற்றும், குற்றங்களை, இரகசியமாக வைத்திருக்கமுடியாது என்றும், அவற்றுக்குப் பலியாவோர், தங்களின் காயங்களினின்று குணமாகும் பயணத்தில், அவர்களுக்கு நம் உடனிருப்பு அவசியம் என்றும், கர்தினால் ஓ'மாலி அவர்கள் கூறினார்.

மேலும், இருபது ஆண்டுகளுக்கு முன்னர், உலகளாவிய குழந்தைப்பருவ அமைப்பை உருவாக்கிய சுவீடன் நாட்டு அரசி சோஃபியா, நொபெல் அமைதி விருது பெற்றுள்ள, காங்கோ நாட்டு போதகர் Denis Mutwege ஆகியோர் உட்பட, பலர், இந்த பன்னாட்டு கருத்தரங்கில் உரையாற்றினர்.

சிறார் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதை தடைசெய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றபோதிலும், டிஜிட்டல் உலகமும், கோவிட்-19 பெருந்தொற்றும், அம்முயற்சியை பின்னடையச் செய்துள்ளன என்று, அரசி சோஃபியா அவர்கள் கூறினார்.

ஏப்ரல் 08, இவ்வியாழனன்று தொடங்கியுள்ள இந்த பன்னாட்டு கருத்தரங்கு, ஏப்ரல் 10, இச்சனிக்கிழமையன்று நிறைவடையும்.

09 April 2021, 14:55