தேடுதல்

Vatican News

ஆயர்களின் தெரிவு பற்றி, ஆயர்கள் பேராயத்தின் தலைவர்

உலக அளவுகோல்களின் அடிப்படையில் அல்லாமல், மத நம்பிக்கை, மற்றும் விவிலிய விழுமியங்களின் அடிப்படையில், மக்களை வழிநடத்தும் மேய்ப்பர்களாக ஆயர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலக அளவுகோல்களின் அடிப்படையில் அல்லாமல், மத நம்பிக்கை, மற்றும் விவிலிய விழுமியங்களின் அடிப்படையில், மக்களை வழிநடத்தும் மேய்ப்பர்களாக ஆயர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர் என்று, ஆயர்கள் பேராயத்தின் தலைவர், கர்தினால் மார்க் உலெட் (Marc Ouellet) அவர்கள் கூறினார்.

திருப்பீடத்தின் பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை விளக்கும் வண்ணம், வத்திக்கான் செய்தி தயாரித்து வெளியிட்டுவரும் ஒரு தொடர் நிகழ்வின் அங்கமாக, ஆயர்கள் பேராயத்தின் தலைவர் கர்தினால் உலெட் அவர்களுடன் வத்திக்கான் செய்தித்துறை மேற்கொண்ட நேர்காணல் இடம்பெற்றது.

ஆயர்கள் எவ்வாறு தெரிவு செய்யபப்டுகின்றனர்

இந்த நேர்காணலில், ஆயர்கள் எவ்வாறு தெரிவு செய்யபப்டுகின்றனர் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு விடையளித்த கர்தினால் உலெட் அவர்கள், ஆயராக தெரிவு செய்யப்படுபவர், பீடத்தில் ஏற்றிவைக்கப்படும் 'புனிதர்' என்ற கண்ணோட்டத்தில் அல்லாமல், அவர், மனித மற்றும் ஆன்மீக விழுமியங்களைக் கொண்டவர் என்ற கண்ணோட்டத்துடன் தெரிவு செய்யப்படுகிறார் என்று கூறினார்.

ஆயர் பணிக்குத் தகுதியானவர்களைத் தெரிவு செய்து, திருத்தந்தையின் முடிவுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ள ஆயர்கள் பேராயம், இறைவேண்டல், கலந்துபேசுதல், உண்மைகளைக் கண்டறிதல் என்ற மூன்று செயல்பாடுகளின் அடிப்படையில் இப்பணியை ஆற்றுகின்றது என்று, கர்தினால் உலெட் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

தலத்திருஅவையில் ஆரம்பமாகும் தெரிவு

ஆயர் பணிக்குத் தகுதியானவர்களைத் தெரிவுசெய்யும் பணி, தலத்திருஅவையில் ஆரம்பமாகிறது என்று கூறிய கர்தினால் உலெட் அவர்கள், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, தலத்திருஅவை அளவில் இந்த பெயர்கள் விவாதிக்கப்பட்டு, அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகத்திற்கு அனுப்பப்படுகிறது என்றும், அங்கிருந்து, இந்த பெயர்கள், ஆயர்கள் பேராயத்தை அடைகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.

உலகெங்கிலுமிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள 23 ஆயர்கள், மற்றும் கர்தினால்கள் அடங்கிய குழு, ஆயர்கள் பேராயம் ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் பங்கேற்று, தங்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட பெயர்களைக் குறித்த விவாதங்களை மேற்கொண்டு, பின்னர் தங்கள் தெரிவுகளை திருத்தந்தைக்கு அனுப்புகின்றனர் என்றும், இந்த தகவல்களின் அடிப்படையில் திருத்தந்தை வெவ்வேறு மறைமாவட்டங்களின் ஆயர்களை முடிவு செய்கிறார் என்றும் கர்தினால் உலெட் அவர்கள் தன் நேர்காணலில் குறிப்பிட்டார்.

மக்களை முன்னிறுத்தி பணிசெய்ய விழைவோரே, ஆயராக...

தங்கள் சொந்த பதவிகளை நாடுவோர், திருஅவைக்குத் தேவையில்லை என்பதையும், மக்களை முன்னிறுத்தி பணிசெய்ய விழைவோரே ஆயராகப் பணிபுரியத் தேவை என்பதையும், கர்தினால் உலெட் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வெவ்வேறு நாடுகளின் ஆயர்களுக்கும், திருத்தந்தைக்கும் இடையே நடைபெறும் 'அத் லிமினா' சந்திப்பு, அந்தந்த நாடுகளின் தேவைகள், பிரச்சனைகள் ஆகியவற்றை தெளிவாக்குவதால், புதிய ஆயர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியில், இந்தச் சந்திப்புக்கள் உதவியாக உள்ளன என்பதையும், கர்தினால் உலெட் அவர்கள் எடுத்துரைத்தார்.

28 April 2021, 16:17