தேடுதல்

Vatican News
கர்தினால் Guixot, நீதிபதி Muhammad Abd al-Salam இருவரும், ஐ.நா.பொதுச்செயலரிடம் அனைவரும் உடன்பிறந்தோர் திருமடலை வழங்குகின்றனர். கர்தினால் Guixot, நீதிபதி Muhammad Abd al-Salam இருவரும், ஐ.நா.பொதுச்செயலரிடம் அனைவரும் உடன்பிறந்தோர் திருமடலை வழங்குகின்றனர். 

திருப்பீடம், ஐ.நா. தோழமையுணர்வுக்கு அழைப்பு

கலந்துரையாடல் நடத்தும் கலையை அறிந்திருப்பது, சமுதாய நட்புணர்வைக் கட்டி எழுப்புவதற்கு உதவும் - கர்தினால் Guixot

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கலந்துரையாடல் நடத்துவது எவ்வாறு என்பதன் கலையை அறிந்திருப்பது, உலகின் தேவைகளுக்குத் திறந்தமனதாய் இருப்பதற்கும், சமுதாய நட்புணர்வைக் கட்டி எழுப்புவதற்கும் ஒரே வழி என்று, பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Miguel Ángel Ayuso Guixot அவர்கள், பன்னாட்டு இணையவழி மெய்நிகர் கூட்டம் ஒன்றில் கூறினார். 

"உடன்பிறந்த நிலை, பன்முகத்தன்மை, மற்றும் அமைதி: திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், 'அனைவரும் உடன்பிறந்தோர்' திருமடலின் விளக்கம்" என்ற தலைப்பில், ஏப்ரல் 15, இவ்வியாழனன்று, ஜெனீவாவில் நடைபெற்ற மெய்நிகர் கூட்டத்தில் உரையாற்றிய கர்தினால் Guixot அவர்கள், இவ்வாறு கூறினார்.

ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மற்றும், பன்னாட்டு நிறுவனங்களில், திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றும் பேராயர் இவான் யுர்க்கோவிச் அவர்கள் ஏற்பாடு செய்த இந்த மெய்நிகர் கூட்டத்தில், கர்தினால் Guixot அவர்கள், "உடன்பிறந்த நிலை, பல்சமய உரையாடல், மற்றும், சமுதாய நீதி" என்ற தலைப்பில், தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.

கலவரங்கள், மற்றும், ஆயுத மோதல்கள் ஆகியவை, தலைப்புச் செய்திகளாக வெளிவரும் வேளையில், உறுதியோடும், துணிவோடும் மேற்கொள்ளும் கலந்துரையாடல்கள், தலைப்புச் செய்திகளாக வருவதில்லை என்றும், அதேநேரம், அத்தகைய கலந்துரையாடல்கள், மேம்பட்ட ஒரு வாழ்வு வாழ்வதற்கு உலகிற்கு உதவும் என்றும், 'அனைவரும் உடன்பிறந்தோர்' திருமடல் கூறுகிறது என்றுரைத்த கர்தினால் Guixot அவர்கள், மதங்களுக்கிடையே நிலவும் ஒத்துழைப்பு,  உலகின் எல்லாப் பகுதிகளிலும், எல்லாக் காலங்களிலும், மனிதர், தங்களின் உரிமைகளோடு வாழ்வதற்கு உதவமுடியும், மற்றும் உதவவேண்டும் என்றும் கூறினார்.

நாம் அனைவரும், ஒரே மனிதக் குடும்பத்தின் உறுப்பினர்கள் என்பதால், இந்த உலகின் குடிமக்களாக, சம உரிமைகளையும், கடமைகளையும் கொண்டிருக்கிறோம் என்று கூறி, பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் தலைவர், தன் உரையை நிறைவுசெய்தார்.

மேலும், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் நடைபெற்ற இந்த மெய்நிகர் கூட்டத்தில் உரையாற்றிய, அந்நகரிலுள்ள ஐ.நா. நிறுவனத்தின் தலைமை இயக்குனர் Tatiana Valovaya அவர்கள், இவ்வாண்டு பிப்ரவரி 4ம் தேதி, மனித உடன்பிறந்தநிலையின் முதல் உலக நாள் சிறப்பிக்கப்பட்டதைக் குறிப்பிட்டு, கோவிட்-19 பெருந்தொற்று முடிவுற்றபின் உலகினர் ஆற்றவேண்டிய கடமைகளை எடுத்துரைத்தார்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய, உலக தொழில் நிறுவனத் தலைமை இயக்குனர், Guy Ryder அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம், நன்னெறி கோட்பாடுகளை கடைப்பிடிக்குமாறு அழைப்பு விடுத்து வருகிறார், ஆனால் அவ்வழைப்பு, பலநேரங்களில்  புறக்கணிக்கப்படுகின்றது என்று கூறினார்.

16 April 2021, 13:24