தேடுதல்

Vatican News
திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் 

யூத இன பகைமை உணர்வுகளுக்கு எதிராக கத்தோலிக்கத் திருஅவை

யூத இனத்திற்கு எதிராகத் தூண்டப்பட்ட பகைமை உணர்வுகளை, கத்தோலிக்கத் திருஅவை, கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக கண்டனம் செய்துவருகிறது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

யூத இனத்திற்கு எதிராகத் தூண்டப்பட்ட பகைமை உணர்வுகளை, கத்தோலிக்கத் திருஅவை, கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக கண்டனம் செய்துவருகிறது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

உலகெங்கும் வாழும் யூதர்கள், ஏப்ரல் 7 மற்றும் 8 ஆகிய இரு நாள்கள், யூத இன தகன நினைவு நாளை சிறப்பிப்பதையொட்டி, திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்கள் அனுப்பியுள்ள காணொளிச் செய்தியில், இவ்வாறு கூறியுள்ளார்.

கிறிஸ்தவர்களுக்கும், கிறிஸ்தவர் அல்லாதோருக்கும் இடையே திகழவேண்டிய உறவை வலியுறுத்தி, 55 ஆண்டுகளுக்கு முன் திருஅவை வெளியிட்ட Nostra Aetate அறிக்கையில் இந்தப் பிரச்சனைக்கு நாம் காணவேண்டிய தீர்வுகள் குறித்து, திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளார் என்று, பேராயர் காலகர் அவர்கள், தன் செய்தியில் கூறியுள்ளார்.

1919ம் ஆண்டு, திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்களுக்கும், யூத மத தலைவர்களுக்கும் இடையே பரிமாறப்பட்ட செய்திகளில், யூத இனத்திற்கு எதிராக நிலவும் பகைமை உணர்வுகள் ஒழிக்கப்படவேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது என்பதை சுட்டிக்காட்டிய பேராயர் காலகர் அவர்கள், இந்த முயற்சிகளின் சிகரமாக, இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் பின்னர் வெளியான Nostra Aetate அறிக்கை அமைந்தது என்பதையும் குறிப்பிட்டார்.

அண்மைய 100 ஆண்டுகளாக கத்தோலிக்கத் திருஅவையின் தலைவர்கள் பலரும் யூத மதத்தினரோடு ஒப்புரவை வளர்க்க பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர் என்று தன் காணொளிச் செய்தியில் கூறிய பேராயர் காலகர் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் வெளியிட்ட 'அனைவரும் உடன்பிறந்தோர்' என்ற திருமடல் மீண்டும் ஒருமுறை இக்கருத்தை வலியுறுத்தியுள்ளது என்று கூறினார்.

08 April 2021, 14:51