தேடுதல்

Vatican News

திருப்பீட செயலகத்தின் பணிகள்

உலகளாவிய சமுதாயமும், அரசியல்வாதிகளும், பொது நலனுக்குப் பணியாற்றுவது, மற்றும், மனிதரை மதிக்கவேண்டியதன் அவசியத்தை, திருப்பீடச் செயலகம் வலியுறுத்தி வருகின்றது - கர்தினால் பரோலின்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருப்பீடச் செயலகத்தின் பணிகள் பற்றி, குறிப்பாக, இந்த கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில், அச்செயலகம் ஆற்றிவரும் பணிகள் பற்றி, வத்திக்கான் செய்திகளுக்கு நீண்ட பேட்டி ஒன்றை அளித்துள்ளார், திருப்பீடச் செயலகத்தின் தலைவரான, கர்தினால் பியெத்ரோ பரோலின்.

உலகளாவிய மேய்ப்பர் என்ற முறையில், திருத்தந்தையின் மேய்ப்புப்பணிக்கும், திருப்பீடத்தின் நிர்வாகத்திற்கும் திருப்பீடச் செயலகம் உதவிவருகின்றது என்றுரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், பொதுநலனுக்குப் பணியாற்றுவது, மற்றும், மனிதரை மதிக்கவேண்டியதன் அவசியத்தை, அரசியல்வாதிகளுக்கு தனிப்பட்ட முறையிலும், உலகளாவிய சமுதாயத்திற்கும், தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

திருப்பீடச் செயலகம், குறிப்பாக, கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில், இதனை அரசியல்வாதிகளுக்கு, அதிகம் வலியுறுத்தி வருகின்றது என்று கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள் வெளியிட்ட Pastor Bonus (ஜூன் 28,1988) அதாவது "நல்ல ஆயன்" என்ற திருத்தூது கொள்கை அறிக்கை வழியாக, திருப்பீடத்தில் கொணரப்பட்ட பல்வேறு சீர்திருத்தங்கள் பற்றியும் விளக்கினார்.

அந்த அறிக்கையில், திருப்பீடச் செயலகம், திருத்தந்தையின் செயலகம் என்று கூறப்பட்டுள்ளது என்றும், திருத்தந்தை தன் பணிகளை ஆற்றுவதற்கும்,  எடுத்துக்காட்டாக, உலகின் ஆயர்களோடு பல்வேறு மொழிகளில் திருத்தந்தை தொடர்பு வைத்துக்கொள்வதற்கும் இச்செயலகம் உதவுகின்றது என்றும், இச்செயலகத்தில், பல நாட்டவர் பணியாற்றுகின்றனர் என்றும், கர்தினால் பரோலின் அவர்கள் கூறினார்.

வத்திக்கானின் உள்நாட்டு மற்றும், வெளிநாட்டு விவகாரங்களில், திருத்தந்தைக்கு மிக நெருக்கமாக இருந்து செயலாற்றி வருகின்ற திருப்பீடச் செயலகம், பல்வேறு திருப்பீடத் துறைகள், திருப்பீடத் தலைமையகம் ஆகியவற்றுக்கு இடையே பணிகளை ஒருங்கிணைப்பதில், திருத்தந்தைக்கு உதவிவருகின்றது என்று, கர்தினால் பரோலின் அவர்கள் கூறினார்.

கர்தினால் பரோலின்
கர்தினால் பரோலின்

நல்ல ஆயன் என்ற திருத்தூது அறிக்கையின் வழியாக, திருப்பீடச் செயலகத்தில், பன்னாட்டு உறவுகள் துறை என்ற ஒரு பிரிவு உருவாக்கப்பட்டது என்றும், இந்தப் பிரிவு, நாடுகளின் தலைவர்களோடு உள்ள விவகாரங்களைக் கவனித்துக் கொள்கின்றது என்றும், கர்தினால் கூறியுள்ளார்.

நாடுகளுக்கு இடையே தூதரக உறவுகளை மேம்படுத்துவது, உலகளாவிய சட்டம் காக்கப்படுவதை வலியுறுத்துவது, திருஅவை, மற்றும், பொதுமக்கள் சமுதாயத்தின் நலனுக்காக உழைப்பது, நாடுகளுக்கு இடையே நல்லிணக்கத்தை ஊக்குவிப்பது போன்ற பணிகளை, இந்தப் பிரிவு ஆற்றிவருகின்றது என்றும், திருப்பீட செயலர் எடுத்துரைத்தார்.

நான்கு ஆண்டுகளுக்குமுன், திருப்பீடச் செயலகத்தில் உருவாக்கப்பட்ட மூன்றாவது பிரிவு, பல்வேறு நாடுகளில் திருப்பீட தூதரகங்களில் பணியாற்றும், திருத்தந்தையின் பிரதிநிதிகளை மேற்பார்வையிடுகின்றது என்றுரைத்தார், கர்தினால் பரோலின்

திருத்தந்தையின் மேய்ப்புப்பணிக்கு உதவிவரும், திருப்பீடத்தின் பல்வேறு துறைகளின் பணிகள் பற்றி, அத்துறைகளின் தலைவர்களைப் பேட்டி கண்டு, அத்துறைகள் பற்றிய தகவல்களை வெளியிட்டு வருகின்றது, வத்திக்கானின் செய்தி ஊடகம்.

13 April 2021, 14:55