தேடுதல்

திருத்தந்தையுடன் திருப்பீட தகவல் தொடர்பு அவை அதிகாரிகள் (2020.09.07).  (இடதுபுறம் முதலில் தொர்னியெல்லி) திருத்தந்தையுடன் திருப்பீட தகவல் தொடர்பு அவை அதிகாரிகள் (2020.09.07). (இடதுபுறம் முதலில் தொர்னியெல்லி) 

ஒரு திருத்தந்தையின் கனவு நனவாக உள்ளது

ஈராக் நாட்டில் இடம்பெற்றுவரும், ஒப்புரவு, மீள்கட்டமைப்பு, அமைதி நிலவச்செய்தல் போன்ற முயற்சிகளுக்கு நேரில் சென்று ஆதரவு வழங்க விரும்பும் திருத்தந்தை

ஒரு திருத்தந்தையின் கனவு நனவாக உள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

ஈராக் நாட்டு மக்களைச் சந்திக்க திருத்தந்தை ஒருவர் வெளிப்படுத்திய ஆவலும், திருத்தந்தையை தங்கள் நாட்டில் வரவேற்க அந்நாட்டு மக்கள் கொண்டிருந்த ஆவலும், 22 ஆண்டுகளுக்குப்பின் தற்போது நனவாக உள்ளதாக அறிவித்தார், திருப்பீட தகவல் தொடர்பு அவையின் செய்திப் பிரிவு இயக்குனர், அந்திரேயா தொர்னியெல்லி.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மாதம் 5ம் தேதி முதல் 8ம் தேதி முடிய, ஈராக் நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ள உள்ளது குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துள்ள தொர்னியெல்லி அவர்கள், ஈராக் நாட்டு கிறிஸ்தவர்களுடன் நெருக்கமாக இருக்கவும், பயங்கரவாதத்தாலும், போராலும் பாதிக்கப்பட்டுள்ள நாட்டை கட்டியெழுப்பும் பணிகளுக்கு ஆதரவு வழங்கவும், இஸ்லாம் ம்க்களை நோக்கி விரித்த கைகளுடன் திருத்தந்தை அந்நாட்டிற்குச் செல்வதாகத் தெரிவித்தார்.

1999ம் ஆண்டே, ஈராக் நாட்டிற்கு திருத்தூதுப் பயணம் செல்ல திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அவர்கள் வகுத்திருந்த திட்டம், இறுதி நேரத்தில் நிறைவேறமுடியாததிலிருந்தே, அந்நாட்டு மக்கள் திருத்தந்தையின் வருகைக்காக ஆவலோடு காத்திருந்தனர் என்று கூறிய, வத்திக்கான் செய்திகள் பிரிவு இயக்குனர் தொர்னியெல்லி அவர்கள், திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அவர்கள், 2000மாம் ஆண்டு சிறப்பிக்கப்படவிருந்த மீட்பின் யூபிலி ஆண்டினை, ஆபிரகாமோடு தொடர்புடைய ஊர் நகரிலிருந்து துவக்கத் திட்டமிட்டிருந்தார் என்றுரைத்தார்.

எந்தச் சூழலிலும் போரைத் தவிர்ப்போம் என குரல் எழுப்பி வந்த திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அவர்களின் கனவை நனவாக்கச் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், போர் என்பது, மனித குலத்திற்கும் அரசியலுக்கும் கிடைத்துள்ள தோல்வி என்பதைக் குறிப்பிட்டு வருகிறார், என தன் செய்தியில் கூறுகிறார், செய்திப் பிரிவு இயக்குனர்.

இயேசுவின் சீடர்கள் போதித்துவந்த காலத்திலேயே கட்டப்பட்ட ஆலயங்களைக் கொண்டுள்ள ஈராக் நாட்டில், இன்று, பல்வேறு துயர்களைச் சந்திக்கும் கிறிஸ்தவர்கள் வேறு நாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளதாகக் கூறும் தொர்னியெல்லி அவர்கள், கடந்த 22 ஆண்டுகளில், அந்நாட்டு கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை, மூன்றில் இரு பகுதி குறைந்துள்ளதாகத் தெரிவிக்கிறார்.

எத்தகையச் சுழலிலும் நாட்டைவிட்டு வெளியேறும் எண்ணத்தைக் கைவிட்டு, மனவுறுதியுடன் ஈராக் கிறிஸ்தவர்கள் வாழவேண்டும் என அழைப்புவிடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் திருத்தூதுப் பயணத்தின் வழியாக, தன் அருகாமையை அறிவிக்க விரும்புவதாகவும், நாட்டில் இடம்பெற்றுவரும், ஒப்புரவு, மீள்கட்டமைப்பு, அமைதி முயற்சிகள் போன்றவைகளுக்கு நேரில் சென்று ஆதரவு வழங்க விரும்புவதாகவும், தன் செய்தியில் கூறியுள்ளார் தொர்னியெல்லி.

மோதல்களும் பெருந்தொற்றும் முன்வைக்கும் பாதுகாப்பற்ற நிலைகளையும் தாண்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 15 மாத இடைவெளிக்குப்பின் மேற்கொள்ளும் இந்த திருத்தூதுப் பயணம், யூத, இஸ்லாம், மற்றும், கிறிஸ்தவர்களுக்கு, நம்பிக்கையின் தந்தையாகிய ஆபிரகாமோடு தொடர்புடைய ஊர் பகுதியிலிருந்து துவங்குவது, மத்திய கிழக்கு நாடுகளுக்கும், உலகுக்கும் சிறப்புச் செய்தி ஒன்றை வழங்குவதாக இருக்கும் என மேலும் கூறியுள்ளார், திருப்பீட தகவல் அவையின் செய்திப்பிரிவு இயக்குனர் தொர்னியெல்லி.

02 March 2021, 15:06