தேடுதல்

"அன்பின் மகிழ்வு குடும்ப ஆண்டு" - மார்ச் 2021-ஜூன் 2022 "அன்பின் மகிழ்வு குடும்ப ஆண்டு" - மார்ச் 2021-ஜூன் 2022 

"அன்பின் மகிழ்வு குடும்ப ஆண்டு" அறிமுக கூட்டம்

மார்ச் 19ம் தேதி, "அன்பின் மகிழ்வு குடும்ப ஆண்டு" துவங்கவிருப்பதையொட்டி, பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு திருப்பீட அவை, செய்தியாளர்கள் கூட்டம் ஒன்றை, ஏற்பாடு செய்திருந்தது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"குடும்பம் உண்மையிலேயே நற்செய்தி என்பதே, குடும்பத்தைக் குறித்த கிறிஸ்தவ பறைசாற்றுதல்" (அன்பின் மகிழ்வு 1) என்ற கருத்துடன் ஆரம்பமாகும் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடல், இவ்வுலகிற்கு தற்போது அதிகம் தேவைப்படும் எதிர்நோக்கை வழங்குகிறது என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

மார்ச் 19, இவ்வெள்ளியன்று, "அன்பின் மகிழ்வு (Amoris Laetitia) குடும்ப ஆண்டு" துவங்கவிருப்பதையொட்டி, பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு திருப்பீட அவை, இவ்வியாழனன்று செய்தியாளர்கள் கூட்டம் ஒன்றை, ஏற்பாடு செய்திருந்தது.

இக்கூட்டத்தில் உரையாற்றிய, இத்திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் கெவின் ஃபாரெல் (Kevin Farrell) அவர்கள், பெருந்தொற்றினால் இவ்வுலகம் முடக்கப்பட்டுள்ள நிலையில், 'அன்பின் மகிழ்வு குடும்ப ஆண்டு' நடைபெறுவது, பொருளுள்ள ஒரு முயற்சியாகத் தெரிகிறது என்று எடுத்துரைத்தார்.

இவ்வுலகம் சந்தித்துள்ள பல்வேறு இழப்புக்களில், குடும்பங்கள் சந்தித்துள்ள உயிரிழப்புக்கள் மிக வேதனையானது என்றாலும், எத்தனையோ குடும்பங்கள், தங்கள் நம்பிக்கையை, எதிர்நோக்கை கைவிடாமல் இருக்க பின்பற்றிய முயற்சிகள் பெரும் உந்துசக்தியாக அமைந்துள்ளன என்று கர்தினால் ஃபாரெல் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

குடும்பங்கள் வெளிப்படுத்தியுள்ள இந்த எதிர்நோக்கு முயற்சிகளைக் கொண்டாடவும், அவற்றை இவ்வுலகில் உறுதி செய்யவும், 'அன்பின் மகிழ்வு குடும்ப ஆண்டு' பெரும் உதவியாக இருக்கும் என்ற எண்ணத்துடன் கத்தோலிக்கத் திருஅவை இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது என்று கர்தினால் பாரெல் அவர்கள் எடுத்துரைத்தார்.

திருஅவையின் பல்வேறு துறைகளின் கூட்டுறவு முயற்சி, எண்ணங்களில் மாற்றம், உருவாக்கப் பணி என்ற மூன்று அம்சங்களை, 'அன்பின் மகிழ்வு குடும்ப ஆண்டு' கொண்டுள்ளது என்று கூறிய கர்தினால் ஃபாரெல் அவர்கள், இவற்றின் விவரங்களை விளக்கிக் கூறினார்.

திருக்குடும்பத்தை பாதுகாத்து, வழிநடத்திய புனித யோசேப்பு திருநாளன்று துவங்கும் 'அன்பின் மகிழ்வு குடும்ப ஆண்டில்', இப்புனிதரின் பரிந்துரையால், இந்த முயற்சி தகுந்த பலன்களை அளிக்கவேண்டும் என்ற வேண்டுதலை வெளியிட்டு, கர்தினால் ஃபாரெல் அவர்கள் தன் உரையை நிறைவு செய்தார்.

இவரைத் தொடர்ந்து, பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு திருப்பீட அவையின் நேரடிச் செயலராகப் பணியாற்றும் பேராசிரியர் காபிரியெல்லா கம்பீனோ (Prof. Gabriella Gambino) அவர்களும், குடும்பத்தை மையப்படுத்தி வத்திக்கானில் நடைபெற்ற ஆயர்கள் மாமன்றத்தில் பங்கேற்ற வாலெந்தீனா, லியோனார்தோ நேப்பி (Valentina - Leonardo Nepi) தம்பதியரும், தங்கள் எண்ணங்களை, செய்தியாளர்கள் கூட்டத்தில் பகிர்ந்துகொண்டனர்.

மார்ச் 19ம் தேதி, இவ்வெள்ளியன்று துவங்கும் "அன்பின் மகிழ்வு குடும்ப ஆண்டு", 2022ம் ஆண்டு, ஜூன் 26ம் தேதி, உரோம் நகரில் நடைபெறவிருக்கும் 10வது உலக குடும்ப மாநாட்டுடன் நிறைவடையும்.

18 March 2021, 14:20