தேடுதல்

Vatican News
ஊர் நகரில், இஸ்லாமியத் தலைவர்களுடன், திருத்தந்தை பிரான்சிஸ் ஊர் நகரில், இஸ்லாமியத் தலைவர்களுடன், திருத்தந்தை பிரான்சிஸ்  (AFP or licensors)

இஸ்லாம்-கிறிஸ்தவ உறவுக்கு மூலைக்கற்களாக மூன்று சந்திப்புக்கள்

இஸ்லாம் மதத்தினரோடு மேற்கொள்ளவேண்டிய உரையாடல்களைக் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிவரும் படிப்பினைகள் என்ற கட்டடத்தின் மூன்று மூலைக்கற்களாக மூன்று சந்திப்புக்கள் இருந்தன

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மதங்களுக்கிடையே, குறிப்பாக, இஸ்லாம் மதத்தினரோடு மேற்கொள்ளவேண்டிய உரையாடல்களைக் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிவரும் படிப்பினைகள் என்ற கட்டடத்தின் மூன்று மூலைக்கற்களாக மூன்று சந்திப்புக்கள் இருந்தன என்று, திருப்பீடத் தகவல்தொடர்பு அவையின் செய்திப் பிரிவு இயக்குனர் – முனைவர் அந்த்ரேயா தொர்னியெல்லி (Andrea Tornielli) அவர்கள் கூறியுள்ளார்.

உலக அமைதியை வளர்க்க உதவும், உண்மையான மத உணர்வையும், மனித உடன்பிறந்த நிலையையும் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிவரும் படிப்பினைகளுக்கு, அவர் மூன்று நாடுகளில் மேற்கொண்ட சந்திப்புக்களும் உரைகளும் மூலைக்கற்களாக அமைந்துள்ளன என்று, தொர்னியெல்லி அவர்கள், வத்திக்கான் செய்தியில், மார்ச் 10, இப்புதனன்று வெளியிட்டுள்ள தலையங்கத்தில் கூறியுள்ளார்.

2016ம் ஆண்டு, அசர்பைஜானிலும், 2017ம் ஆண்டு, எகிப்திலும், இவ்வாண்டு, ஈராக்கின் ஊர் நகரிலும் திருத்தந்தை மேற்கொண்ட சந்திப்புக்களும், அவர் வழங்கிய உரைகளும், இஸ்லாம்-கிறிஸ்தவ உரையாடலுக்கு முக்கிய மைல்கற்களாக அமைந்துள்ளன என்று தொர்னியெல்லி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

Shia முஸ்லிம்களை அதிகம் கொண்டிருந்த அசர்பைஜான் கூட்டத்திலும், Sunni முஸ்லிம்களை அதிகம் கொண்டிருந்த எகிப்து கூட்டத்திலும், இவ்விரு முஸ்லிம் குழுக்கள், மற்றும் ஏனைய சமயத்தினரும் பங்கேற்ற ஈராக்கின் ஊர் நகர் கூட்டத்திலும், உரையாடல், உடன்பிறந்த நிலை ஆகியவை குறித்து திருத்தந்தை கூறிய கருத்துக்களை, தொர்னியெல்லி அவர்கள், தன் தலையங்கத்தில், தொகுத்து வழங்கியுள்ளார்.

இவ்வுலகைக்குறித்தும், இறைவனைக் குறித்தும் மனிதர்கள் கொண்டிருக்கும் வரையறுக்கப்பட்ட சிந்தனைகளை, முழு உண்மை என்று வலியுறுத்துவது ஆபத்தானது என்று அசர்பைஜான் நாட்டின் பாக்கு (Baku) நகரில் கூறிய திருத்தந்தை, மனித முயற்சிகளில், குறிப்பாக, அமைதியை நிலைநாட்ட நாம் மேற்கொள்ளும் முயற்சிகளில் இறைவனை ஒதுக்கிவிடமுடியாது என்று, எகிப்தின் கெய்ரோ நகரில் கூறினார் என்பதை, தொர்னியெல்லி அவர்கள் நினைவுகூர்ந்துள்ளார்.

உலக அமைதி என்ற பெரும் முயற்சியில், கடவுளையும், மதத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு, அரசியல் தீர்வுகளை மட்டும் நம்பியிருப்பது ஆபத்தானது என்பதை, மார்ச் 6ம் தேதி, ஈராக்கின் ஊர் நகரில் நடைபெற்ற பல்சமயக் கூட்டத்தில் திருத்தந்தை வலியுறுத்தியிருப்பது, அவரது படிப்பினைகளில் நாம் காணும் மற்றொரு மூலைக்கல் என்பதை, தொர்னியெல்லி அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

கடவுளை ஒதுக்கிவிட்டு, உலகப் பொருள்களை பீடமேற்றி, பொய் தெய்வ வழிபாட்டை வளர்த்துவரும் இவ்வுலகப் போக்கிற்கு தகுந்த மாற்று மருந்தாக, இறைவனையும், அயலவரையும் மையப்படுத்தும் உண்மையான மத உணர்வும், உடன்பிறந்த உணர்வும் அமையும் என்பது, திருத்தந்தை வழங்கிய உரைகளில் வெளிப்படும் முக்கிய உண்மை என்று, தொர்னியெல்லி அவர்கள், தன் தலையங்கத்தில் விளக்கியுள்ளார்.

10 March 2021, 14:31