தேடுதல்

“ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?”

திருத்தந்தையின் சிறப்பு ஊர்பி எத் ஓர்பி இறைவேண்டல் பற்றிய பதிவுகளை மீண்டும் பார்ப்பது, நாம் தொடர்ந்து அனுபவித்துவரும் நிலைமையை மீள்பார்வை செய்யவைக்கின்றது - கர்தினால் Mendonça

மேரி தெரேசா:வத்திக்கான் செய்திகள்

இத்தாலியில் 2020ம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டவேளையில், அவ்வாண்டு மார்ச் 27ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றிய, சிறப்பு ஊர்பி எத் ஓர்பி இறைவேண்டல் மற்றும், ஆசீர், ஆகியவற்றை உள்ளடக்கிய நூல் ஒன்றை, திருப்பீட தகவல் தொடர்புத் துறை வெளியிட்டுள்ளது.

“ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?” (மாற்.4:35-41) என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்நூலில், சிறப்பு ஊர்பி எத் ஓர்பி இறைவேண்டல் நிகழ்வில் திருத்தந்தை கூறிய வார்த்தைகள், மற்றும், அடையாளங்களை விளக்கும் உருவப்படங்களும், உரைகளும் இடம்பெற்றுள்ளன.

திருப்பீட தகவல் தொடர்புத் துறையின் செயலர் அருள்பணி லூசியோ அத்ரியான் ரூயிஸ் அவர்கள் தயாரித்துள்ள இந்நூல் பற்றிய தன் கருத்துக்களை, வத்திக்கானின், லொசர்வாத்தோரே ரொமானோ நாளிதழின் ஆவணக்காப்பாளர் கர்தினால் José Tolentino de Mendonça அவர்கள் வெளியிட்டுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சிறப்பு ஊர்பி எத் ஓர்பி இறைவேண்டலை நிறைவேற்றிய ஓராண்டுக்குப்பின், அந்நிகழ்வு பற்றிய படங்களையும், மற்ற பதிவுகளையும் மீண்டும் பார்ப்பது மிகவும் பயனாக உள்ளது என்றுரைத்துள்ள கர்தினால் Mendonça அவர்கள், நாம் தொடர்ந்து அனுபவித்துவரும் நிலைமையை, அவை மீள்பார்வை செய்யவைக்கின்றன என்று கூறியுள்ளார்.

நுகர்வுத்தன்மையை அதிகமாகக் கொண்டிருக்கும், ஆதிக்க கலாச்சாரத்தால் குறிக்கப்பட்டுள்ள, நம் சமுதாயங்களின் பலவீனமான நிலைமையை இந்நூல் எடுத்துரைக்கின்றது என்றும், அந்த இறைவேண்டலில் திருத்தந்தை மிகத் துணிச்சலோடு கூறியுள்ள கருத்துக்கள், நம் வெறுமையை உணரவைக்கின்றன என்றும், கர்தினால் Mendonça அவர்கள் கூறியுள்ளார்.

“ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?” (மாற்.4:35-41) என்று, நற்செய்தியாளர் மாற்கு பதிவுசெய்துள்ள இயேசுவின் திருச்சொற்களை மையப்படுத்தி, திருத்தந்தை வழங்கிய மறையுரை, பெருந்தொற்று காலத்தில் நாம் இருக்கும் நிலைமையைப் படம்பிடித்துக் காட்டியுள்ளது என்று கர்தினால் Mendonça அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 March 2021, 15:20