தேடுதல்

Vatican News
புனிதபூமி அமைப்பினர் புனிதபூமி அமைப்பினர்   (MAZUR)

புனித பூமியில் துன்புறும் சகோதரர் சகோதரிகள் மீது அக்கறை

கர்தினால் சாந்த்ரி: திருப்பயணிகளின் எண்ணிக்கைக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள புனித பூமியை மனதில் கொண்டு, நம் கடமையை உணர்ந்து செயல்படுவோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஒப்புரவு எனும் கொடையின் விளைவுகளை உணர்ந்தவர்களாக, நம்மீது கொண்ட அன்பால் இயேசு நமக்காக உயிர்துறந்தார் என்ற புனித பவுலின் வார்த்தைகளுடன், புனிதவாரத்தில், எருசலேமுக்கு, ஆன்மீகப் பயணம் மேற்கொள்வோம் என உலக கத்தோலிக்க சமுதாயங்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார், கர்தினால் லியானார்தோ சாந்த்ரி.

ஒவ்வோர் ஆண்டும் புனித வெள்ளியன்று உலகின் அனைத்துக் கோவில்களிலும் புனித பூமிக்கென காணிக்கை திரட்டப்படுவது குறித்து, அனைத்து கத்தோலிக்க மறைமாவட்டங்களுக்கும், கீழை வழிபாட்டுமுறை பேராயத்தின் தலைவர், கர்தினால் சாந்த்ரி அவர்கள், மார்ச் 11, இவ்வியாழனன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

மத, பொருளாதார, சுற்றுச்சூழல், அரசியல், மற்றும் சமூகத்தொடர்பில் நாம் ஒருவர் ஒருவருடன் கொண்டிருக்கவேண்டிய உறவு நிலைகள் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட 'அனைவரும் உடன்பிறந்தோர்' (Fratelli tutti) ஏடு குறித்து, கர்தினால் சாந்த்ரி அவர்கள், தன் மடலில் குறிப்பிட்டுள்ளனர்.

கல்வாரியில் நாம் அனைவரும் சகோதரர் சகோதரிகளானோம் எனக் கூறும் கர்தினாலின் மடல், இயேசு அடக்கம் செய்யப்பட்ட இடம், ஆள் நடமாட்டம் ஏதுமற்று கைவிடப்பட்ட இடமாக தற்போது காணப்படுவதுபோல், கடந்த ஆண்டு மார்ச் 27ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மேற்கொண்ட ‘Urbi et Orbi’ சிறப்பு வழிபாட்டின்போது, உரோம் நகர் புனித பேதுரு பெருங்கோவில் வளாகம் அவ்வாறு காட்சியளித்ததை நினைவூட்டுகிறது என்பதை, சுட்டிக்காட்டியுள்ளது.

புனித பூமியிலும் மத்தியக்கிழக்குப் பகுதியிலும் வாழும் கிறிஸ்தவரகள்,  இன்றைய பெருந்தொற்று காரணமாக ஏனைய பகுதி கிறிஸ்தவர்களிடமிருந்து தொடர்பற்ற நிலையில் வாழ்வதாகவும், திருப்பயணிகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளதால் பலர் வருமானமின்றியும், தங்கள் குடும்பங்களை பராமரிக்க முடியாமல் இருப்பதாகவும் கவலையை வெளியிட்டுள்ளார், கர்தினால் சாந்த்ரி.

மத்தியக்கிழக்கு நாடுகள் மட்டுமல்ல, ஏனைய நாடுகளும் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதால், நிதிகளைத் திரட்டுவதில் சிரமம் இருப்பது குறித்தும், புனித பூமிக்கான நிதி திரட்டல்கள் குறைந்துவருவது குறித்தும், தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் சாந்த்ரி.

இயேசுவின் நல்ல சமாரியர் உவமையை, நமக்கு எடுத்துக்காட்டாகக் காட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு கிறிஸ்தவரும் செயல்படவேண்டும் என விண்ணப்பிப்பதுபோல், நம் சகோதரர்களின் துன்பங்கள் குறித்து நாம் பாராமுகமாக இல்லாமல், பலவீனமான மக்களுடன் உடன்செல்பவர்களாகவும், அவர்கள் குறித்து அக்கறையுடையவர்களாகவும் செயல்படவேண்டும் என விண்ணப்பிக்கும் கர்தினால் சாந்த்ரியின் கடிதம், புனித பூமியில் துன்புறும் நம் சகோதர்ர்கள், சகோதரிகள் மீதான நம் அக்கறையை இவ்வாண்டின் நிதி திரட்டலின்போது வெளிப்படுத்துவோம் என கேட்டுள்ளது.

மத்தியக்கிழக்குப் பகுதியின் கிறிஸ்தவர்கள் தங்கள் சொந்த நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான சோதனையை களைவதற்கும், பங்குத்தளங்கள் தங்கள் மேய்ப்புப்பணி மற்றும் கல்விப்பணிகளை தொடர்ந்து நடத்தவும், ஏழைகள், மற்றும் துன்புறுவோருக்கு உதவும் அர்ப்பணம் செயல்படுத்தப்படவும், நம் ஒருமைப்பாடு, மற்றும்  பகிர்வு எனும் சிறு செயல்கள் வழியாக ஆற்றுவோம் என அக்கடிதத்தில் அழைப்பு விடுத்துள்ளார், கர்தினால் சாந்த்ரி.

திருப்பயணிகளின் எண்ணிக்கைக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள புனித பூமியை மனதில் கொண்டு, நம் கடமையை உணர்ந்து செயல்படுவோம் என்ற விண்ணப்பத்துடன், தன் மடலை நிறைவுச் செய்துள்ளார், கர்தினால் சாந்த்ரி.

11 March 2021, 14:26