தேடுதல்

Vatican News
அருள்பணி ஹூவான் அந்தோனியோ கெரெரோ ஆல்வெஸ் அருள்பணி ஹூவான் அந்தோனியோ கெரெரோ ஆல்வெஸ்   (Society of Jesus)

திருப்பீடம் செலவுகளைக் குறைத்துள்ளது, மறைப்பணியை அல்ல

2020ம் ஆண்டில், பயணங்கள் குறைக்கப்பட்டது, கருத்தரங்குகள் மற்றும், கூட்டங்கள், இணையம் வழி நடத்தப்பட்டது போன்றவற்றால், பணத்தைச் சேமிக்க முடிந்தது - அருள்பணி கெரெரோ

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

2021ம் ஆண்டில், திருப்பீடம் தனது செலவுகளை எட்டு விழுக்காடு குறைப்பதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும், கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு மத்தியில் நிதிப்பற்றாக்குறையை எதிர்நோக்கி வந்தாலும், நன்கொடைகள் மற்றும், பேதுரு காசு என்ற உதவிகளை, தொடர்ந்து  நம்பி இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 12, இவ்வெள்ளியன்று, திருப்பீடத்தின் 2021ம் ஆண்டின் வரவுசெலவு திட்டம் பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ள, திருப்பீடத்தின் பொருளாதாரச் செயலகம், 2021ம் ஆண்டின் வரவுசெலவு திட்டம், ஏறத்தாழ ஆறு கோடி டாலர் பற்றாக்குறையை காட்டியுள்ளது என்று கூறியுள்ளது.

பேதுருவின் காசு என்ற பெயரில், உலகின் அனைத்து ஆலயங்களிலும் திரட்டப்படும் காணிக்கைகள் வழியாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும், 5 கோடியே 70 இலட்சம் டாலர் நிதியில், 3 கோடியே 70 இலட்சம் டாலர், திருப்பீடத்தின் நிர்வாகப் பணிகளுக்கும், 2 கோடி டாலர் பிறரன்புப் பணிகளுக்கென்றும் பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

திருத்தந்தையின் பிறரன்புப் பணிகள், திருப்பீடத்தின் தலைமையகம் உள்ளிட்ட மற்ற முக்கிய பணிகளுக்கென்று, பேதுருவின் காசு காணிக்கைகள் வழங்கப்படுகின்றன.

இந்த வரவுசெலவு திட்டம் பற்றிக் கூறிய, திருப்பீட பொருளாதாரச் செயலத்தின் தலைவர் இயேசு சபை அருள்பணி ஹூவான் அந்தோனியோ கெரெரோ ஆல்வெஸ் (Juan Antonio Guerrero Alves) அவர்கள், கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு மத்தியில், பணத்தைச் சேமிப்பதற்கு கிடைக்கும் வாய்ப்புக்கள் பற்றி ஆராய்ந்து வருவதாகக் கூறினார்.

2020ம் ஆண்டில், பயணங்கள் குறைக்கப்பட்டது, கருத்தரங்குகள் மற்றும், கூட்டங்கள், இணையம் வழி நடத்தப்பட்டது போன்றவற்றால், பணத்தைச் சேமிக்கமுடிந்தது என்று கூறிய, அருள்பணி கெரெரோ அவர்கள், தற்போதைய நெருக்கடி நிலை தொடர்ந்தால், விசுவாசிகளின் ஆதரவு திருப்பீடத்திற்கு அதிகம் தேவைப்படும் என்று எடுத்தியம்பினார்.

2019ம் ஆண்டில், பேதுரு காசு காணிக்கைகள், ஏறத்தாழ 7 கோடியே 80 இலட்சம் டாலர் கிடைத்தது என்றும், இது திருப்பீடத்தின் 35 விழுக்காட்டுச் செலவினங்களுக்கு உதவியது என்றும், அருள்பணி கெரெரோ அவர்கள் தெரிவித்தார்.

அருள்பணி கெரெரோ அவர்கள், திருப்பீடத்தின் திருப்பீடத் தகவல்தொடர்பு அவையின் செய்திப் பிரிவு இயக்குனர் அந்த்ரேயா தொர்னியெல்லி அவர்களுக்கு அளித்த பேட்டியில், 2021ம் ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ள செலவுகள், திருப்பீடத்தின் அண்மை வரலாற்றில் மிகக் குறைவே என்று கூறினார்.

13 March 2021, 15:40