தேடுதல்

Vatican News
இனவெறிக்கு எதிரான தேசிய தின திருப்பலியில், கர்தினால் பீட்டர் டர்க்சனும், அருள்பணி  Augusto Zampiniயும் இனவெறிக்கு எதிரான தேசிய தின திருப்பலியில், கர்தினால் பீட்டர் டர்க்சனும், அருள்பணி Augusto Zampiniயும்  

இனவெறியை ஒழித்திட, கலந்துரையாடல் கலாச்சாரம் தேவை

ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், உரிமைகள் மீறப்பட்டுள்ளோர், நோயுற்றோர், வன்முறைக்கு உள்ளானோர் ஆகியோரில், இயேசுவின் முகத்தைக் கண்டு உதவ, ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இனவெறி என்ற தொற்றுக்கிருமியை ஒழித்திட வேண்டுமெனில், மனித மாண்பை மதிப்பதை அடிப்படையாகக் கொண்ட கலந்துரையாடல் கலாச்சாரம் தேவைப்படுகின்றது என்றார்,  ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் துணைச்செயலர், அருள்பணி Augusto Zampini.

இனவெறிக்கு எதிரான உலக நாள், மார்ச் 21, ஞாயிற்றுக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்டதற்கு முந்தைய நாள்,  திருப்பீடத்திற்கான அர்ஜென்டினா தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் தலைமையில் நிறைவேற்றப்பட்ட திருப்பலியில் மறையுரை வழங்கிய, அத்திருப்பீட அவையின் துணைச்செயலர், அருள்பணி Zampini அவர்கள், மற்றவர்களைத் தீர்ப்பிடுவதையும், மற்றவர்களைவிட தாங்கள், ஒருபடி மேலானவர்கள் என எண்ணுவதையும் கைவிட்டு, மன்னிப்பு, சேவை என்பவைகள் வழியாகவே இனவெறி எனும் தொற்றுக்கிருமியை அகற்றமுடியும் என உரைத்தார்.

சட்டத்தின் வழியாக மட்டுமல்ல, மாறாக, கலந்துரையாடல் வழியாக இனவெறியை அகற்றமுடியும் என்று கூறிய அருள்பணி  Zampini அவர்கள், ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், உரிமைகள் மீறப்பட்டுள்ளோர், நோயுற்றோர், வன்முறைக்கு உள்ளானோர், ஆகியோரில் இயேசுவின் முகத்தைக் கண்டு உதவ ஒவ்வொருவரும் முன்வர வேண்டும் என விண்ணப்பித்தார்.

பாகுபாட்டு நிலைகளால் பாதிப்படைந்துள்ள மக்களுக்கு புது வாழ்வு வழங்க உதவும் நோக்கத்தில், மற்றவர்களையும், இயற்கையையும் மதிக்கும் புதிய இதயத்தை இறைவனிடம் வேண்டுவோம் என்ற அழைப்பையும் முன்வைத்தார், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் துணைச்செயலர், அருள்பணி Zampini.

இனவெறிக்கு எதிரான உலக நாளையொட்டி நிறைவேற்றப்பட்ட இத்திருப்பலியில், வத்திக்கானுக்கென அர்ஜென்டினா நாட்டின் தூதராகப் பணியாற்றும் Maria Fernanda Silva, மற்றும், பானமா, எல் சல்வதோர், குவாத்தமாலா ஆகிய நாடுகளின் தூதரகப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

1960ம் ஆண்டு, மார்ச் 21ம் தேதி, தென் ஆப்ரிக்காவின்  Sharpeville எனுமிடத்தில் இனவெறிக்கு எதிரான அமைதிப் போராட்டத்தில் கலந்து கொண்டோர் மீது அந்நாட்டு இராணுவம் தாக்குதல் நடத்தி, 69 பேர் உயிரிழந்தது, 180 பேர் காயமடைந்ததை நினைவுகூரும் விதமாக, இனவெறிக்கு எதிரான உலக நாள் 1966ம் ஆண்டு ஐ.நா. நிறுவனத்தின் பொது அவையால் உருவாக்கப்பட்டது.

22 March 2021, 12:51