தேடுதல்

இந்தியாவில் தண்ணீர் குடம் விற்பவர் இந்தியாவில் தண்ணீர் குடம் விற்பவர் 

திருஅவையின் நலப்பணி திட்டம் கண்டுவரும் முன்னேற்றம்

தண்ணீர் எனும் முக்கிய ஆதாரத்தை பாதுகாப்பதில், கத்தோலிக்கத் திருஅவையின் அமைப்புகள், மதம், நாடு என்ற எல்லைகளைத் தாண்டி, அனைவருக்கும் சேவையாற்றுகின்றன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நலப்பணிகளில் ஈடுபட்டுவரும் கத்தோலிக்க அமைப்புகள் சிறந்தமுறையில் செயலாற்ற உதவும் நோக்கத்தில், திருஅவையால் கடந்த ஆண்டு துவக்கப்பட்ட WASH என்ற திட்டம் மேற்கொண்டுள்ள முன்னேற்ற முயற்சிகள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை

மார்ச் 22, திங்கள்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட உலக தண்ணீர் நாளையொட்டி செய்தியொன்றை வெளியிட்டுள்ள ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவை, உலகிலுள்ள துறவு சபைகள், ஆயர் பேரவைகள், காரித்தாஸ் அமைப்புக்கள், உலக நீர் திட்டம் 2020 என்ற அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து, கடந்த ஆண்டு துவக்கப்பட்ட WASH என்ற திட்டம், சுத்த நீர், நலப்பணி மையங்களுக்கு கிடைப்பதிலும், நோய்கள் பரவாமல் கட்டுப்படுத்துவதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளது, என அதில் கூறியுள்ளது.

வறட்சி, மாசுக்கேடு, மற்றும் வீணாக்குதல் வழியாக பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கிவரும், நீர் எனும் முக்கிய ஆதாரத்தை பாதுகாப்பதில், கத்தோலிக்கத் திருஅவையின் அமைப்புகள், மதம், நாடு என்ற எல்லைகளைத் தாண்டி அனைவருக்கும் சேவையாற்றி வருவதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மக்களுக்கு சிறப்பான நலப்பணிகளை ஆற்றும் கத்தோலிக்க அமைப்புக்கள் குறித்து தன் பாராட்டை வெளியிட்டுள்ள ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் அறிக்கை, குறிப்பாக, Fate bene fratelli என அறியப்படும் புனித இறை யோவானின் மருத்துவப்பணி சகோதரர்கள் சபை 52 நாடுகளில் நடத்திவரும் 400 சமுதாய மற்றும் நலப்பணி மையங்களின் தன்னலமற்ற சேவை குறித்து பாராட்டியுள்ளதோடு, 22 நாடுகளில் தலத்திருஅவைகளால் நடத்தப்படும் 150 நலப்பணி மையங்கள் குறித்து ஆழமான ஆய்வுகளை நடத்தி அவற்றின் தேவைகள் குறித்து ஆராய்ந்துள்ளதாகவும் தெரிவிக்கிறது.

உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள கத்தோலிக்க நல மையங்களில் தரத்தை அதிகரித்தல், கட்டுமானப் பணிகளை ஊக்குவித்தல், கருவிகளை வாங்க உதவுதல், பணியாளர்களுக்கு பயிற்சி போன்றவற்றில் தேவையான உதவிகளை வழங்க ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை திட்டமிட்டு செயலாற்றி வருவதாகவும் இவ்வறிக்கையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் நலப்பணித்திட்டங்கள், புதிய நோய்கள் பரவாமல் தடுப்பதை உறுதிச் செய்யவும், கத்தோலிக்க நலப்பணி மையங்களில் உதவி பெறுவோருக்கு நல்ல பணிகளை ஆற்றவும் உதவுவதாக உள்ளன என உரைத்த உலக காரித்தாஸ் அமைப்பின் பொதுச்செயலர் ஆலோசியஸ் ஜான் அவர்கள், தங்களிடம் உதவிபெறும் மக்களுக்கு சிறந்த நலப்பணிகள் கிட்டுவதை உறுதிசெய்ய, பங்குத் தளங்கள், பள்ளிகள், நல மையங்கள், மற்றும் சமூகப்பணி மையங்கள் வழியாக தொடர்ந்து காரித்தாஸ் இயக்கம் உழைத்து வருவதாகவும் தெரிவித்தார்

22 March 2021, 12:44