தேடுதல்

Vatican News

திருத்தந்தையின் ஈராக் பயணம் பற்றி கர்தினால் பரோலின்

பல்வேறு பிரச்சனைகளால் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவரும் ஈராக் நாட்டிற்கு திருத்தந்தை செல்வது, அந்நாட்டின் மீது கத்தோலிக்கத் திருஅவை கொண்டுள்ள அக்கறையைக் காட்டுகிறது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மார்ச் 5, வருகிற வெள்ளி முதல், 8, திங்கள் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஈராக் நாட்டில் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணத்தைக் குறித்து, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், வத்திக்கான் செய்திக்கு, நேர்காணல் ஒன்றை வழங்கியதோடு, ஒரு குறுகிய காணொளிச் செய்தியையும் வெளியிட்டுள்ளார்.

கோவிட்-19 பெருந்தொற்று உலகெங்கும் பரவியதைத் தொடர்ந்து, திருத்தந்தையின் வெளிநாட்டுப் பயணங்கள், கடந்த 15 மாதங்களாக நடைபெறவில்லை என்பதை, இந்த நேர்காணலின் துவக்கத்தில் கூறியுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், ஈராக் நாட்டிற்கு, திருத்தந்தை ஒருவர் செல்வது, வரலாற்றில் இதுவே முதல் முறை என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

கத்தோலிக்கத் திருஅவையின் அக்கறை

பல்வேறு பிரச்சனைகளால் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவரும் ஈராக் நாட்டிற்கு திருத்தந்தை செல்வது, அந்நாட்டின் மீது கத்தோலிக்கத் திருஅவை கொண்டுள்ள அக்கறையைக் காட்டுகிறது என்றும், இது, இப்பயணத்தின் முக்கிய நோக்கம் என்றும், கர்தினால் பரோலின் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

கடந்த 20 ஆண்டுகளாக ஈராக் நாட்டில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்துள்ளது என்று கூறும் வத்திக்கான் செய்தித்துறை, அரசுத்தலைவர் சதாம் ஹுசேன் அவர்கள் நீக்கப்படுவதற்கு முன், அதாவது 2003ம் ஆண்டு, ஏறத்தாழ, 14 இலட்சமாக இருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை, தற்போது ஒரு சில ஆயிரமாகவே உள்ளது என்று கூறியுள்ளது.

ஈராக்கை மீண்டும் கட்டியெழுப்ப...

தன்னை மீண்டும் கட்டியெழுப்பி வரும் ஈராக் நாட்டில், கிறிஸ்தவர்கள் உட்பட, அனைவருக்கும் அக்கறையும், சம உரிமைகளும் உள்ளன என்பதை, திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம் வலியுறுத்தும் என்று கர்தினால் பரோலின் அவர்கள் எடுத்துரைத்தார்.

அந்த நாட்டைக் கட்டியெழுப்புவதில், ஊழல் ஒழிப்பு, பல்சமய உரையாடல் மற்றும் அனைவருக்கும் சம நீதி ஆகியவை இடம்பெறும் என்று தான் கருதுவதாக கர்தினால் பரோலின் அவர்கள் இந்தப் பேட்டியில் குறிப்பிட்டார்.

கிறிஸ்தவ-இஸ்லாம் உரையாடலின் அவசியம்

2019ம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கெய்ரோவின் அல் அசார் தலைமைக் குரு, அகமத் அல்-தய்யேப் அவர்களுடன் இணைந்து மனித உடன்பிறந்த நிலை அறிக்கையில் கையெழுத்திட்டபோது, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மறைகள் உலக அமைதிக்கு வழி வகுக்கவேண்டும் என்பதை தெளிவுபடுத்தினார் என்பதை, கர்தினால் பரோலின் அவர்கள் இந்தப் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

அதேவண்ணம், தன் ஈராக் பயணத்தின்போது, நஜாஃப் (Najaf) புனித நகரில், மிக முக்கியமான இஸ்லாமியத் தலைவர், பெரும் அயத்தொல்லா அலி அல்-சிஸ்தானி அவர்களை, திருத்தந்தை சந்திக்கும் நிகழ்வைக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார், கர்தினால் பரோலின்.

03 March 2021, 15:34