தேடுதல்

Vatican News
திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் 

மோதல்களுக்கு, போரின் வழியாக தீர்வு காண முடியாது

கர்தினால் பரோலின் : திடீரென உலகைத் தாக்கிய பெருந்தொற்று, ஒன்றிணைந்தே நாம் காக்கப்பட முடியும் என்ற பாடத்தை நமக்கு விடுக்கிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

ஆயுதப்போட்டிகளும், தடுப்புச்சுவர் எழுப்புதல்களும், ஒருவரை மற்றவரிலிருந்து தூர விலக்கி வைக்கவே உதவுகின்றனவே தவிர, ஒன்றிணைந்து மீட்கப்பட உதவுவதில்லை, என, இணையவழி கருத்தரங்கு ஒன்றில், இச்செவ்வாயன்று உரையாற்றினார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

'பெருந்தொற்று காலத்தில் ஒன்றிணைந்த ஆயுதக் களைவை முன்னெடுத்துச் செல்லுதல்' என்ற தலைப்பில், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இணையவழி கருத்தரங்கில், மார்ச் 23, செவ்வாயன்று உரையாற்றிய கர்தினால் பரோலின் அவர்கள், ஆயுதக் களைவுக்கும், பெருந்தொற்றுக்கும் இடையே பாதுகாப்பு என்ற தொடர்பு இருப்பது குறித்தும், பாதுகாப்பை எவ்விதம் உறுதி செய்வது என்பது குறித்தும் எடுத்துரைத்தார்.

அமைதியையும் பாதுகாப்பையும் நாடும் மனிதரின் ஏக்கம், அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதற்குரிய ஏக்கத்தின் வெளிப்பாடு என்றுரைத்த திருப்பீடச் செயலர், திடீரென உலகைத் தாக்கிய பெருந்தொற்று, ஒன்றிணைந்தே நாம் காக்கப்பட முடியும் என்ற பாடத்தை நமக்குப் புகட்டுகிறது என உரைத்தார்.

ஆயுதப்போட்டிகள், தடுப்புச்சுவர்களை எழுப்புதல், பணத்தை வழிபடுதல், நுகர்வுக் கலாச்சாரம் என்பவைகள் வழியாக நாம் பாதுகாப்பை பெறமுடியாது என்பதை நாம் உணர்ந்தவர்களாக, பகைமையின் ஆயுதங்களை அமைதியின் கருவிகளாக மாற்ற வேண்டும் என ஒவ்வொருவருக்கும் அழைப்பு விடுத்த கர்தினால் பரோலின் அவர்கள், ஆயுதங்களுக்கென செலவழிக்கப்படும் பணம், மக்களின் உணவுத்தேவைகளை நிறைவுசெய்ய பயன்படுத்தப்படவேண்டும் என்ற விண்ணப்பத்தை நாடுகளின் தலைவர்களுக்கு முன்வைத்தார்.

ஒன்றிணைந்த பாதுகாப்பு என்பது, அரசியல், மற்றும், இராணுவ நிலைகளோடு மட்டும் தொடர்புடையதல்ல, மாறாக, நன்னெறி, நீதி, சமுதாய, மற்றும், பொருளாதார நிலைகளோடும் தொடர்புடையது என்பதையும், இணையவழி கருத்தரங்கில் வலியுறுத்தினார், கர்தினால் பரோலின்.

ஒன்றிணைந்த பாதுகாப்பை ஊக்குவிப்பது என்பது, ஆயுதப்போட்டி, பண வழிபாடு, நுகர்வுக் கலாச்சாரம், ஆகியவைகளைத் தாண்டிச்சென்று, பொதுநலனையும், ஏழ்மை  அகற்றலையும் ஊக்குவிப்பதில், தன் வெற்றியைக் காண்கின்றது என, திருப்பீடச் செயலர் மேலும் எடுத்துரைத்தார்.

நாம் ஒவ்வொருவரும் எவ்வாறு நெருங்கிய வகையில் இணைக்கப்பட்டுள்ளோம் என்பதை, இந்த பெருந்தொற்று காலம் நமக்கு கற்பித்துள்ளது என்று கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், இன்றைய உலகின் நலப்பிரச்சனை, உணவு நெருக்கடி, சுற்றுச்சூழல் அழிவு, சமுதாய, மற்றும் பொருளாதார நெருக்கடிகளை, எவரும் தனித்து நின்று வெற்றிகாண முடியாது, மாறாக, ஒருவருக்கொருவர் மதிப்பு, கலந்துரையாடல், மற்றும், நம்பிக்கை வழியாகவே அனைத்து நெருக்கடிகளுக்கும் தீர்வுகாண முடியும் என்பதை வலியுறுத்தினார்.

மோதல்களுக்கு போரின் வழியாக தீர்வு காணமுடியாது என்பதை வலியுறுத்திய கர்தினால் பரோலின் அவர்கள், ஒருமைப்பாடு, நீதி, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றம், அடிப்படை மனித உரிமைகள் மதிக்கப்படுதல், இயற்கையின் மீது அக்கறை போன்றவைகளே, உலகின் நெருக்கடிகளுக்கு தீர்வைத் தரவல்லவை என்பதை, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இணையவழி கருத்தரங்கில் சுட்டிக்காட்டினார்.

23 March 2021, 15:26