தேடுதல்

Vatican News
அல்பேனியா நாட்டில் பணியாற்றும் அருள் சகோதரிகள் அல்பேனியா நாட்டில் பணியாற்றும் அருள் சகோதரிகள்  (Violeta Marashi)

அர்ப்பணிக்கப்பட்டோர், 'இறைவனின் அழகிற்கு சாட்சியங்கள்'

இவ்வுலகிலும், உடன்பிறந்த மனிதர் அனைவரிலும் அழகைக் காணவும், அதை போற்றிக் காக்கவும் அர்ப்பண வாழ்வைத் தேர்ந்தோர் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளனர் - கர்தினால் Braz de Aviz

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 பெருந்தொற்றினாலும், அதன் தொடர்பாக எழுந்துள்ள பல்வேறு நெருக்கடிகளாலும் மனம் தளர்ந்திருக்கும் உலக மக்களின் உள்ளங்களில், நம்பிக்கையைத் தூண்டிவிட, அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வைத் தேர்ந்தவர்கள் சிறப்பாக அழைக்கப்பட்டுள்ளனர் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், கூறியுள்ளார்.

1996ம் ஆண்டு, மார்ச் 25, ஆண்டவருடைய பிறப்பு அறிவிப்பின் பெருவிழாவன்று, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், அர்ப்பண வாழ்வைத் தேர்ந்தவர்களுக்காக எழுதிய "Vita Consecrata" என்ற திருத்தூது அறிவுரை மடல் வெளியிடப்பட்டதன் 25ம் ஆண்டு, இவ்வாண்டு நிறைவு பெறுகிறது.

இத்தருணத்தையொட்டி, அர்ப்பண வாழ்வைத் தேர்ந்தோர், மற்றும், திருத்தூது வாழ்வைத் தேர்ந்தோர் நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவரான கர்தினால் João Braz de Aviz அவர்கள், 'இறைவனின் அழகிற்கு சாட்சியங்கள்' என்ற தலைப்பில், மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திருஅவை வாழ்வின் இதயமாக, அர்ப்பணிக்கப்பட்டோரின் வாழ்வு அமைந்துள்ளது என்று, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், தன் திருத்தூது அறிவுரை மடலில் கூறியுள்ளதை, தன் மடலின் துவக்கத்தில் குறிப்பிட்டுள்ள கர்தினால் Braz de Aviz அவர்கள், "Vita Consecrata" திருத்தூது அறிவுரை மடல் வெளியிடப்பட்ட வேளையில் இவ்வுலகம் சந்தித்த பல்வேறு நிலையற்றச் சூழல் இன்றும் தொடர்கிறது என்று கூறியுள்ளார்.

அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு, இறைவனின் பேருண்மையில் உருவாகும் உறவுகளின் அடிப்படையில் கட்டியெழுப்பப்படுகிறது என்று இம்மடலில் சுட்டிக்காட்டியுள்ள கர்தினால் Braz de Aviz அவர்கள், புனிதம் என்பது, தனிமையில் ஒருவர் பெறும் உன்னதம் அல்ல, மாறாக, உறவுகள் வழியே பெறும் உன்னதம் என்று கூறியுள்ளார்.

கடவுள் அழகுள்ளவர் என்றால், 'மனிதராய் பிறந்த அனைவரிலும்' இயேசு அழகுள்ளவர் என்றால், அவருக்காக அர்ப்பணிக்கப்பட்டோர் அனைவரும், அவரில் அழகுள்ளவர்கள் என்றும், இந்த அழகிற்கு சாட்சியங்களாக வாழ நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்றும் கர்தினால் Braz de Aviz அவர்கள் இம்மடலில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இவ்வுலகிலும், உடன்பிறந்த மனிதர் அனைவரிலும் இவ்வழகைக் காணவும், அதை போற்றிக் காக்கவும் அர்ப்பண வாழ்வைத் தேர்ந்தோர் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளனர் என்று, கர்தினால் Braz de Aviz அவர்கள் இம்மடலின் இறுதியில் அழைப்பு விடுத்துள்ளார்.

25 March 2021, 15:34