தேடுதல்

Vatican News
வத்திக்கான் நிதி கண்காணிப்பு, மற்றும், தகவல் அமைப்பின் (ASIF) தலைவர் Carmelo Barbagallo வத்திக்கான் நிதி கண்காணிப்பு, மற்றும், தகவல் அமைப்பின் (ASIF) தலைவர் Carmelo Barbagallo 

வத்திக்கான் நிதி கண்காணிப்பு அமைப்பு வலுப்படுத்தப்பட்டுவருகிறது

சட்டத்திற்குப் புறம்பே பணப் பரிமாற்றம், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி, வருவாய் பற்றிய தகவல் பரிமாற்றம் போன்றவற்றுக்கு எதிராக, வத்திக்கான், நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சட்டத்திற்குப் புறம்பே பணம் பரிமாறப்படுவதற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வத்திக்கானின் நடவடிக்கைகள், பன்னாட்டு தரத்தோடு ஒத்துச்செல்வதாக அமைந்துள்ளன என்று, வத்திக்கான் நிதி கண்காணிப்பு, மற்றும், தகவல் அமைப்பின் (ASIF) தலைவர் Carmelo Barbagallo அவர்கள் கூறியுள்ளார்.

வத்திக்கான், மற்றும், திருப்பீடத்தின் நிதி கண்காணிப்பு நடவடிக்கைகள் பற்றி, வத்திக்கானின் செய்தித் துறைக்குப் பேட்டியளித்துள்ள Barbagallo அவர்கள், இந்த அமைப்பிற்கு, புதிய இயக்குனர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, இதன் பணிகளை மேம்படுத்தும் என்ற தன் நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார்.

பணம் சார்ந்த விவகாரங்களில், தற்போதைய சூழலில், நன்னெறி விதிமுறைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகின்றது என்றும், இதுவே, திருப்பீடத்தின் செயல்பாடுகளை, எப்போதும், மற்றவைகளிலிருந்து பிரித்துக் காட்டுகின்றது என்றும், இதுவே, இந்த நிதி அமைப்பை வலுப்படுத்துவதாக உள்ளது என்றும், Barbagallo அவர்கள் கூறியுள்ளார்.

சட்டத்திற்குப் புறம்பே பணம் பரிமாறப்படுவது, பயங்கரவாதத்திற்கு நிதியுதவி, வருவாய் பற்றிய தகவல் பரிமாற்றம் போன்றவற்றுக்கு எதிராக, வத்திக்கான் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள், அதே விவகாரத்தில் பன்னாட்டு தரத்தோடு ஒத்துச்செல்லும்முறையில் இடம்பெறுகின்றன என்று, மேலும் கூறினார், Barbagallo.

உரோம் மாநகரின் Tor Vergata பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற, ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போர் கலந்துகொண்ட கூட்டத்தின் நிறைவு அமர்வில் உரையாற்றிய Barbagallo அவர்கள், வத்திக்கானின் நிதி நிறுவனங்கள், மற்றும், அவை உருவாக்கப்படுவதற்குள்ள காரணங்கள் ஆகியவை பற்றி எடுத்துரைத்தார்.

20 March 2021, 14:24